சினிமா

2019-ல் இசை ரசிகர்கள் கொண்டாடிய சில பாடல்கள்..!

2019-ல் இசை ரசிகர்கள் கொண்டாடிய சில பாடல்கள்..!

webteam

2019-ம் ஆண்டில் பல திரைப்படங்கள் வெளியான நிலையில் பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. ரேடியோ, டிவி, யூடியூப், பிளேலிஸ்ட் என எல்லா இடங்களிலும் திரும்ப திரும்ப எதிரொலித்த பல பாடல்கள் உண்டு. சில பாடல்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்தார்கள். அப்படி வெளியாகி ஹிட் அடித்த பல பாடல்களில் 10 பாடல்களை காணலாம்.

கண்ணான கண்ணே

அஜித் நடிப்பில் ஃபேமிலி சென்டிமெண்ட்டாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் உண்டு. அப்பா-மகள் சென்டிமெண்ட்டை தாங்கிய வரிகள் கொண்ட பாட்டு என்பதால் டிக் டாக் உள்ளிட்ட வலைதளங்களில் இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கண்ணம்மா உன்ன

இசை ரசிகர்களை துள்ளல் போட வைத்து பாடலாக அமைந்தது இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா உன்ன பாடல். சாம் இசையில் அனிருத் பாடிய இந்த பாடலை முனுமுனுக்காத காதலர்கள் இல்லை. காட்சி மொழியாகவும் இந்தப்பாடல் ரசனைக்கு ஏற்ப இருந்ததால் செம ஹிட் அடித்தது.

அன்பே பேரன்பே

என்ஜிகே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது அன்பே பேரன்பே பாடல். யுவன் இசையில் உமா தேவி வரிகளில் வெளியான இந்தப்பாடல் பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் இடம் பிடித்தது. சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் குரல் என்பதால் பலரின் மனதையும் உருக வைத்த பாடல்களின் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்தது.

சிங்கப்பெண்ணே

பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் பலருக்கு உத்வேகம் கொடுத்த பாடலாகவும் அமைந்தது. ஏஆர்ஆர் இசை, குரல், விஜயின் நடனம், விவேக்கின் ஊக்கம் கொடுக்கக்கூடிய வரிகள் என சிங்கப்பெண்ணே பாடல் ரசிகர்களை எளிதாக தன்வசம் இழுத்தது

கோடி அருவி கொட்டுதே

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் யுகபாரதியின் காதல் பொங்கும் வரிகளில் இடம்பெற்ற கோடி அருவி கொட்டுதே பாடல் பலருக்கும் பேவரைட். ஷான் ரோல்டன் கொடுத்த இனிமையான இசையும், அழகான காட்சிகளும் இந்தப்பாடலுக்கு ப்ளஸாக அமைந்தது.

மரணம், மாஸு மரணம்

பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸு மரணம் பாடல் உண்மையாகவே மாஸு மரணமாகவே அமைந்தது. அனிருத்தின் துள்ளல் இசை, ரஜினிக்கே பொருந்தக்கூடிய வரிகள், ரஜினியின் ஆட்டம் என பாடல் பலரையும் எழுந்து ஆடவைத்தது. தொடக்கத்தில் எஸ்பிபி இந்தப்பாடலை தொடங்குவது மேலும் சிறப்பாக அமைந்தது.

எள்ளு வய பூக்கலையே:

வெற்றிக் கூட்டணியான ஜிவி, சைந்தவி இணைந்த பாடல் என்ற சிறப்புடன் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் எள்ளு வய பூக்கலையே. வரிகளில் சோகத்தை பிழிந்த யுகபாரதிக்கு இணையாக காட்சியில் சோகத்தை கண்முன் கொண்டுவந்தார் தனுஷ். இந்த வருடத்தின் கவனிக்கத்தக்க சோகப்பாடலிலும் எள்ளு வய பூக்கலையே பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு

தாரமே தாரமே:

ஜிப்ரான் இசையில் கடாரம் கொண்டான் படத்தில் இடம்பிடித்த தாரமே தாரமே பாடல் இந்த வருடத்தின் காதல் பாடல்களில் முக்கிய இடத்தை பிடித்தது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், ரிங் டோன்கள் என பல இடத்தையும் இப்பாடல் ஆக்கிரமித்தது. மெலடி ஹிட்டான இந்தபாடலை பாடியவரும் சித் ஸ்ரீராம் தான்.

மேகதூதம்

ஐரா திரைப்படத்தில் இடம்பெற்ற மேகதூதம் பாடலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தாமரையின் அழகான வரிகள், நயன்தாராவின் வித்தியாசமான தோற்றம் கொண்ட காட்சிகள் என இந்தப்பாடல் 2019ம் ஆண்டின் பிளே லிஸ்டில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது

வா வா பெண்ணே

96 திரைப்படத்தில் ஹிட் ஆல்பம் கொடுத்த கோவிந்த் வசந்தா கொடுத்த வா வா பெண்ணே பாடல் உறியடி2 படத்தில் இடபெற்றது. சித் ஸ்ரீராம், பிரியங்கா குரலில் உருவான இந்தப்பாடல் பலரையும் ரசிக்க வைத்தது. குறிப்பாக காதல் பாடல்களில் பேவரைட் லிஸ்டில் இந்தப்பாடல் இடம்பிடித்தது.