சினிமா

‘தமிழகத்தில் தேசிய கருத்துள்ள படங்களை வரவிடுவதில்லை’ - அர்ஜுன் சம்பத்

சங்கீதா

மதத்தை வைத்து வியாபாரம் செய்யும் மிஷினரிகளைதான் எதிர்க்கிறோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜுன சம்பத் தெரிவித்துள்ளார்.

ஃபகத் ஃபாசில், நஸ்ரியா, கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிப்பில், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான மலையாள படம், ‘டிரான்ஸ்’. இந்தப்படத்தை பிரபல இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து, இயக்கி இருந்தார். அமல் நீரத் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பிரபாகர் படத்தொகுப்பை மேற்கொண்டிருந்தார். மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் போலி கும்பல் ஒன்று, அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த கும்பலிடம் படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே மோசடிக்குத் துணை போவதாகவும், பின்னர் உண்மை தெரிந்து என்ன நடவடிக்கை எடுக்கிறான் என்பதாக இந்தப் படம் அமைந்திருக்கும். மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம், தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது.

இந்நிலையில், ‘நிலை மறந்தவன்’ பட விழாவில் ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத் பங்கேற்று பேசினர். அப்போது பேசிய அர்ஜூன் சம்பத், “நாங்கள் கிறிஸ்தவர்களுக்கோ, இயேசுவுக்கோ எதிரானவர்கள் அல்ல. மதத்தை வைத்து வியாபாரம் செய்யும் மிஷினரிகளைதான் எதிர்கிறோம்.

கேரளாவில் இது போன்ற படங்கள் வெளியாவது சாத்தியமாகிறது. ஆனால் தமிழகத்தில் இது போன்ற படத்தை தயாரிக்க விடமாட்டார்கள். சமீபத்தில் ‘பீஸ்ட்’ என்ற படம் வந்தது. காவியை கிழிக்கிறார்கள் என்று சொன்னார்கள். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராமரை காட்டிவிட்டார்காள். அதை சங்கி என்றார்கள். தற்போது ‘கே.ஜி.எஃப்.’ படம் வந்துள்ளது. அது சூப்பர் சங்கியாக உள்ளது. அங்கு தேசிய கருத்துள்ள படங்கள் வருகின்றன. ஆனால் தமிழகத்தில் தேசிய கருத்துகொண்ட படங்கள் வராமல் மிஷினரிகள் பார்த்துகொள்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.