தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மாற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் விஷால் கைது செய்யப்பட்டு மாலை ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு பதிவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் பதிவுத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்கதிற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கத்தின் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை பிற்பகல் அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுத்தது தவறு என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சங்க நிர்வாகிகளை காவல்துறை கையாண்ட விதம் தவறானது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்காமல் பூட்டு போடுவதா என நீதிபதி கேள்வி எழுப்பினர்.