முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரஞ்சித் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்ய மாட்டோம் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால், அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஜுன் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை ரஞ்சித் மீது எவ்வித கைது நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.