நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம் எனவும் ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டது குறித்து அளிக்கப்பட்ட புகார்களை தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் பரிசீலித்தார். அத்துடன் வரும் 23ஆம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைப்பதாகவும் அவர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பில் நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன் முறையிடப்பட்டது.
அத்துடன் தேர்தலை நிறுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விஷால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மூவாயிரம் பேருக்கு மேல் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களில் வெறும் 61 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியது தவறு எனக்கூறி பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
வரும் 23 ஆம் தேதி தேர்தலை அவர்கள் நடத்திக்கொள்ளலாம் எனவும் ஆனால் மறு உத்தரவு வரும்வரை வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார். அதுவரை வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு ஜூலை 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.