சினிமா

''சிறகிலிருந்து பிறக்கும் பறவை'' - விடுதலை பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ டாட்டூ

webteam

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக ‘நேர்கொண்ட பார்வை’ தமிழில் உருவானது. இதனை  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கினார். ‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். பெண் உரிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. 

'No means No'  என்ற மூன்று வார்த்தைகளுக்குள் இருக்கும் ஒரு மனநிலையை, ஒரு பெரிய விளக்கத்தை பெண்கள் பார்வையில் இருந்து விளக்குகிறது ‘நேர்கொண்ட பார்வை’. பெண்களை இந்தச் சமூகம் அவர்களின் உடை, செயல்கள் எனப் பல வெளிப்புற காரணிகளால் எளிதாக தீர்மானித்துவிடுவதை தீர்க்கமாக எதிர்த்து நிற்கிறது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம். 

இப்படி பெண்களின் முழு சுதந்திரம் குறித்தும் அவர்களுக்கு எதிரான சமூக பார்வைகள் குறித்தும் பேசும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா நடித்துள்ளார். படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரத்தை எதிரொலிக்கும் விதமாக இருப்பது அவர் வரைந்திருக்கும் டாட்டூ.

படம் பார்க்கும் பலரும் ஷ்ரத்தாவின் டாட்டூவை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஒரு மாடர்ன் கேர்ள் என்ற பிம்பத்துக்காக மட்டுமே வரையப்பட்ட டாட்டூ அல்ல அது. பெண்களின் சுதந்திரத்தை இறகில் இருந்து மீண்டும் பிறக்கும் பறவையாக அந்த டாட்டூ உணர்த்துகிறது.

பெண்களுக்கு எதிராக இந்தச் சமூகம் கட்டமைக்கும் கற்பிதங்களுக்கு முடங்கிவிடாமல் ஒரு சுதந்திர பறவையாக பெண்கள் மீண்டு வர வேண்டுமென்பதையே பறவைகள் டாட்டூவும் நேர்கொண்ட பார்வையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கின்றன. FREE HER என்ற பொருளோடு விடுதலையும், சுதந்திரத்தையும் குறிக்கும் விதமாக அந்தப் பறவைகள் டாட்டூ இருப்பதாக கூறப்படுகிறது.

‘பிங்க்’ திரைப்படத்திலும் டாப்சி வரைந்திருந்த பறவைகள் டாட்டூ அனைவராலும் கவனிக்கப்பட்டது. படம் வெளியான நேரத்தில் பெண்கள் பலரும் டாப்சியின் பறவைகள் டாட்டூவை விரும்பி வரைந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.