இந்திரன்ஸ், மதுபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் `சின்ன சின்ன ஆசை'. இப்படம் ஜூன் 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கேரளாவில் நடைபெற்றது. சூர்யாவின் ’கருப்பு’ படம் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகராகி இருக்கிறார் இந்திரன்ஸ். இதில் பேசிய நடிகர் இந்திரன்ஸ், "பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும், சில உயிர்ப்புள்ள கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது என்னுள் ஒரு தயக்கம் இருக்கும். அத்தகைய ஒரு படம்தான் ‘சின்ன சின்ன ஆசை’. இந்த சினிமாவுக்காக கதையைக் கேட்டவுடன் நான் சரி என்று நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டேன். மதுபாலா மேடம்தான் கதாநாயகி என்று என்னிடம் சொன்னார்கள். ’இந்த சினிமாவில் கதாநாயகனாக நடிப்பது யார் என்று கேட்டால் என் பெயரைச் சொல்லிவிடாதீர்கள், இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லுங்கள் என தயாரிப்பாளர்களிடம் கூறச் சொல்ல வேண்டும்’ என்று நான் நினைத்தேன்.
அவர் என்னைப் பற்றி விசாரிப்பார். அப்போது நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று தெரிந்தால், அவர் என்னுடன் நடிக்கத் தயக்கம் காட்டலாம். ஒருவேளை, நடிக்க விருப்பம் இருந்தாலும் வரமாட்டார்கள். பல படங்களில் எனக்கு இதுபோல் நடந்துள்ளது. என்னுடன் நடிக்க உள்ளவர்கள் என பெரிய நடிகைகளின் பெயர்கள் சொல்லப்படும், ஆனால் இறுதியில் அவர்கள் படத்தில் நடிக்க வரமாட்டார்கள். எனது முந்தைய வேடங்களையும், தோற்றங்களையும் கண்டு பல நடிகைகள் என்னுடன் நடிக்கத் தயங்கியுள்ளனர். அதனால்தான் மதுபாலா இந்த படத்தில் நடிக்க வருவாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. கதை பிடித்து மதுபாலா வரச் சம்மதித்ததால் எனது அந்த கவலை நீங்கியது.
ஜூன் 19-ஆம் தேதி சினிமா திரையரங்குக்கு வரும்போது, ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற படபடப்புடன் காத்திருக்கிறேன். எனது ஆரம்பகால வாழ்க்கையில் நல்ல கதாநாயகிகளுடன் நடிக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்தது. அப்போது ஹேம மாலினியுடன் நடிக்கவேண்டும் என மனதில் வைத்திருந்தேன்.
அது நடக்கவில்லை, ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த மதுபாலாவை நாயகியாகப் பெற்றதில் மகிழ்ச்சி. தலைமுறை மாறியபோது, நான் அவர்களுக்கு ஏற்ற ஒரு மனிதனாக மாறிவிட்டேன். ஒதுங்கிவிடாமல் தொடர்ந்து பயணித்ததால்தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. இது புதிய தலைமுறை எனக்கு அளித்த பரிசு" என்றார்.