சினிமா வரலாற்றில் சில படங்கள்தான் மீண்டும் மீண்டும் பார்த்தால்தான் வியப்பை ஏற்படுத்தும். இப்படியொன்றை எப்படி எடுத்தார்கள் என வியந்தோத தோன்றும். அப்படியான ஒரு படம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இயக்குநரின் பார்வையும், நடிகரின் ஒத்துழைப்பும் இணையும் நுட்பமான தருணமே காலத்தால் அழியாத படைப்புகளின் கருவறை. தீரன் அதிகாரம் ஒன்று அந்த அரிதான தருணத்தின் பிரதிபலிப்பு.
2000-களின் தொடக்கத்திலிருந்து சென்னையின் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவந்தன. அதுபற்றி போலீஸார் விசாரித்துவரும் வேளையில் ஒரு எம்எல்ஏ கொல்லப்படுகிறார். ஒரு போலீஸின் வீட்டிலேயே அந்தக் கும்பல் கைவைக்க, அவர்களைத் தேடிப் புறப்படுகிறார் போலீஸ் அதிகாரியான தீரன் திருமாறன் (கார்த்தி). அதில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை. கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும். இயக்குநர் எச்.வினோத் மேற்கொண்ட கடினமான உழைப்பு படத்தில் தெரியும். கார்த்தியின் நடிப்பும் அவ்வளவு யதார்த்தமாக இருக்கும். தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியாகி 8வது வருடம் இன்று.
ஒரு படம் நன்றாக அமைவதற்கு இயக்குநரின் கிரியேட்டிவிட்டியும் அதனை புரிந்து கொண்டு நடிகர் அளிக்கும் முழு ஒத்துழைப்பும் ஒரே புள்ளியில் இணைவதுதான் முக்கியமான அம்சம். அந்த வகையில் எச்.வினோத் மற்றும் கார்த்தி இருவரும் தீரன் அதிகாரம் ஒன்று கதையை தூக்கி சுமந்தார்கள். ஆனால், இயக்குநர் எச்.வினோத் மற்றும் நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த பயணம் என்ன ஆனது. கார்த்தி எப்படி சரியாக தன்னுடைய திரைப் பயணத்தை அமைத்துக் கொண்டார்.. எச்.வினோத்திற்கு எங்கு சறுக்கியது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் எச்.வினோத். தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் அரிதான படம் அது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு மோசடிகளை மையமாக வைத்து மிக யதார்த்தமாக கதையை எழுதியிருப்பார். அந்த கதைக்கு நடிகர் நட்டியும் அப்படி பொருந்திப்போயிருப்பார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்தார். முதல் படத்தில் இருந்தது போலவே தீரனிலும் இயக்குநரின் தனித்தன்மை அப்படியே தெரிந்தது. 3 வருட காலம் எடுத்துக் கொண்டு முறையான வரலாற்று தரவுகளை தொகுத்து படத்தில் கச்சிதமாக கையாண்டிருப்பார் எச்.வினோத். முதல் இரண்டு படங்களை தொடர்ந்து அடுத்த மூன்று படங்களிலும் அஜித் குமார் உடன் பணியாற்றினார். இதில் நேர்கொண்ட பார்வை ஓரளவுக்கு அவரது தனித்தன்மைக்கு ஒத்துப் போனாலும் மற்ற இரண்டிலும் முதல் இரண்டு படங்களில் பார்த்த வினோத்தின் சிக்னேச்சரை பார்க்க முடியவில்லை.
சூப்பர் ஸ்டார் ஹீரோக்களுடன் இணையும் பொழுது இது நிகழ்வது இயல்புதான். ஆனாலும் முதல் இரண்டு படங்களை பர்த்தவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சியது.
இது வினோத்திற்கு மட்டும் நடக்கவில்லை. லோகேஷ் கனகராஜ், ரஞ்சித் போன்றோருக்கும் நடந்துள்ளது. மாநகரம், கைதி படங்களில் பார்த்த லோகிஷின் தனித்தன்மை மற்றப் படங்களில் இருக்காது. மாஸ்டரில் மட்டும் ஓரளவுக்கு இருக்கும். அதேபோல், அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை கொடுத்து கவனிக்க வைத்த பா.ரஞ்சித், கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றினார். காலாவில் ஓரளவுக்கு சரியாக ஓர்க்கவுட் ஆகி இருந்தாலும் கபாலியில் சரியாக அமையவே இல்லை. மீண்டும் சார்பாட்டா பரம்பரை மூலமாக தன்னுடைய இயக்குநர் சிக்னேச்சரை கொண்டுவந்தார் பா.ரஞ்சித். அதேபோல்தான் இயக்குநர் எச்.வினோத்தும் தன்னுடைய தனித்துவத்தை காட்டும் வகையில் படத்தை இயக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள ஜனநாயகன் படமோ அஜித் பட பாணியில்தான் முடியும் என்று தெரிகிறது. அதற்கு சான்று தற்போது வெளியாகி இருக்கும் பாடல்.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் கதைத் தேர்வில் மிகப்பெரிய கில்லாடியாக இருப்பவர் கார்த்தி. மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர் பருத்தி வீரன் படம் மூலம் ஹீரோவாக மாஸ் எண்ட்ரி கொடுத்தார். அடுத்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த இரண்டு படங்களே போதும் அவரது கதைத் தேர்வு அறிவுக்கு. கார்த்தியின் கதைத் தேர்வில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று இருக்கிறது. முதல் படம் வெற்றி கொடுத்த இயக்குநர்களுடன் தொடர்ச்சியாக அவர் கைகோர்த்து இருக்கிறார். அதற்கு சான்றே மேலே குறிப்பிட்ட இயக்குநர்கள்தான்.
லோகேஷ் உடன் கைதி, பா.ரஞ்சித் உடன் மெட்ராஸ் படங்களில் பணியாற்றி இருக்கிறார். நான் மகான் அல்ல, சிறுத்தை, கொம்பன், சர்தார், மெய்யழகன் இப்படி பல படங்களை சொல்லலாம். ஒரு திரைப்படத்தை சரியாக எடுக்க தெரியும் இயக்குநர்களை தேர்வு செய்து அவர்களின் கதைக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்து படத்திற்கு உயிர் கொடுப்பார். ஒரு கதை கண்டிப்பாக க்ளிக் ஆகும் என்பதை நன்கு கணித்து அதில் பயணிக்கிறார். அந்த வரியில் அவர் தற்போது கையில் எடுத்திருக்கும் படம்தான் மார்ஷல்.
டாணாக்காரன் எனும் அற்புதமான படத்தை கொடுத்த தமிழ் உடன் கைகோர்த்து இருக்கிறார் கார்த்தி. கமர்ஷியல் படங்கள் கொடுக்க நினைத்து சறுக்கிய வரலாறும் கார்த்திகிற்கு உண்டு. ஹீரோ ஆக தன்னுடைய தனித்தன்மையும் தெரிய வேண்டும், கதையும் நன்றாக பேசப்பட வேண்டும் என்ற தெளிவுதான் கார்த்தியின் வெற்றிக்கு காரணம்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் - நடிகர் கூட்டணிகள் ஒரு படத்தின் கலைத் தன்மையையும், அதன் நீண்டகால மதிப்பையும் தீர்மானிக்கும் முக்கிய இயக்க சக்திகள். இந்த கட்டுரையில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை மையமாகக் கொள்ளாமல், அந்த படைப்பை உருவாக்கிய படக்குழுவின் இரண்டு முக்கிய தூண்களான இயக்குநர் எச்.வினோத் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோரின் பயணத்தையும், அவர்களின் படத் தேர்வு முறைகளையும் விரிவாக பார்த்தோம். ஒரு இயக்குநரின் படத் தேர்வு என்பது வெறும் கதையைத் தேர்வது அல்ல; அது அவரது அடையாளத்தைத் தேர்வது தான். அதேபோல், ஒரு நடிகரின் படத் தேர்வு என்பது வெறும் கதாபாத்திரத்தைத் தேர்வது அல்ல; அது தனது கரியரின் நீண்டகால மதிப்பீட்டை உருவாக்குவது.
எச்.வினோத்தின் ஆரம்ப படைப்புகளில் ரியலிசம், தகவல் நேர்த்தி, கதை சொல்லல் முறை மற்றும் இயக்குநரின் தனித்துவம் எல்லாம் இருந்தது. சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் அவரை தமிழ் சினிமாவின் முக்கியமான நவீன இயக்குநர்களின் வரிசையில் நிறுத்தின. ஆனால், பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்த அவர், தனது ஸ்டைலிஸ்டிக் சிக்னேச்சரை முழு ஆற்றலோடு வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தது. இது தமிழ் சினிமாவின் நட்சத்திர மையச் சூழலின் விளைவு என்றாலும், வினோத்தின் கலைநிலை மீண்டும் தீவிரமான, செயல்திறன் மிக்க தேடலுக்குத் தள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது.
தீரன் அதிகாரம் ஒன்று என்ற அற்புதமான படைப்பை கொடுத்த எச்.வினோத்திற்கு நிச்சயம் ஒரு கம்பேக் படைப்பு தேவை. படமாக இல்லாமல் இயக்குநரின் படைப்பாக அது அமைய வேண்டும். நிச்சயமாக ஜனநாயகனில் அது நிகழ வாய்ப்பு குறைவுதான். ஜனநாயகனுக்கு பிறகான அவரது திரைப்பயணமே அவர் யார் என்பதை மீண்டும் நிலைநிறுத்தும். எச்.வினோத் பயணத்தை சுட்டிக் காட்டவே கார்த்தியின் பயணத்தை மேலே சுட்டிக்காட்டினோம்.