தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க இருப்பதாக நடிகர் பிரசாந்த் தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்திருக்கிறார்.
‘வைகாசி பொறந்தாச்சு’ மூலம் தமிழ் சினிமாவின் இளம் நாயகராக அறிமுகமானவர் பிரசாந்த். இந்தப் படம் 1990ல் வெளியானது. இப் படத்தில் இடம்பெற்ற ‘தண்ணீ குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது’ பாடல் அன்றைய இளைஞர்களின் விருப்பமான பாடலாக அமைந்தது. அந்தப் படம் வெளியான காலத்தில் விஜய், அஜித் ஆகிய நடிகர்கள் சினிமா உலகிலேயே இல்லை.
இந்தப் படத்திற்குப் பிறகு ‘செம்பருத்தி’ , ‘திருடா திருடா’, ‘ஆணழகன்’ , ‘ஹலோ’,‘கண்ணெதிரே தோன்றினாள்’, ’பார்த்தேன் ரசித்தேன்’ ‘ஸ்டார்’ ,‘மஜ்னு’, ‘வின்னர்’ என இவரது படங்களின் பட்டியல் வளர்ந்தது. இதில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜீன்ஸ்’ பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக இவரது திருமணத்திற்குப் பிறகு இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு இடைவெளி விழுந்தது. அதன் பிறகு காலம் கடந்து வெளியான ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ , ‘சாகசம்’ போன்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இந்நிலையில்தான் சில தினங்கள் முன் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்க, பொயாபதி சீனு இயக்கும் தெலுங்கு படமான ‘வினய விதய ராமா’ வின் டீசர் வெளியானது. அதில் பிரசாந்த் துணை நடிகர் வேடத்தில் நடித்திருந்தது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவர் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால்தான் துணை நடிகர் வேடத்திற்கு இறங்கி உள்ளார் என பலரும் கவலை தெரிவித்தனர்.
இந்தச் செய்தி பரவி வரும் நேரத்தில் நடிகர் பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தனது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜானி’ படத்தின் ட்ரெய்லர் இந்த மாதம் 16 ஆம் தேதி வெளியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் இந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்தக் கதையின் தமிழ் வடிவத்தில்தான் பிரசாந்த் நடித்துள்ளார். அதனை அவரது தந்தை தியாகராஜனே தயாரித்துள்ளார். இவருடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரசாந்திற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள் மத்தியில் இந்தச் செய்தி மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.