dharmendra, hema malini x page
சினிமா

நடிகர் தர்மேந்திரா உடல்நிலை குறித்து வதந்தி.. மனைவி ஹேமமாலினி மறுப்பு!

நடிகர் தர்மேந்திரா காலமாகிவிட்டார் என செய்தி வெளியாகியிருந்த நிலையில் அதை அவரது மனைவி ஹேமமாலினி மறுத்துள்ளார்.

Prakash J

நடிகர் தர்மேந்திரா காலமாகிவிட்டார் என செய்தி வெளியாகியிருந்த நிலையில் அதை அவரது மனைவி ஹேமமாலினி மறுத்துள்ளார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரும், ’ஹீமேன்’ என்று புகழப்படுபவருமான தர்மேந்திரா, இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான அவர், இப்போதும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார், அவரது அடுத்த வெளியீடு  ’அகஸ்திய நந்தா’ மற்றும் சிமர் பாட்டியா நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ’இக்கிஸ்’ ஆகும்.

dharmendra

இந்த நிலையில், மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவமனை நிர்வாகம், வென்டிலேட்டர் உதவியுடன் தர்மேந்திரா தீவிரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்திருந்தது. இதற்கிடையே அவரைக் காண பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் மருத்துவமனைக்குப் படையெடுத்தபடியே இருந்தனர். இதனால், அவரைப் பற்றிய தவறான தகவல்கள் இணையத்தில் வைரலாகின.

நடிகர் தர்மேந்திரா காலமாகிவிட்டார் என செய்தி வெளியாகியிருந்த நிலையில் அதை அவரது மனைவி ஹேமமாலினி தற்போது மறுத்துள்ளார். எக்ஸ் சமூக தளத்தில் பதவிட்டுள்ள அவர், ”சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறிவரும் ஒருவரை இறந்துவிட்டார் என எப்படி கூறலாம்” என வினவியுள்ள ஹேமமாலினி, ”இது மன்னிக்க முடியாத தவறு” என கூறியுள்ளார். மேலும், ”இது பொறுப்பற்ற செயல் என்றும் தங்கள் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை” என்றும் ஹேமமாலினி சாடியுள்ளார். சிகிச்சைக்குப் பின் தர்மேந்திரா உடல்நலம் தேறிவருவதாக, அவரது மகள் இஷா தியோல் கூறியுள்ளார்.

தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் தரப்பினரும் தர்மேந்திரா குறித்து வெளியான செய்தியை மறுத்துள்ளனர். தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து ஊகங்கள் எழுவது இது முதல் முறையல்ல. இந்த மாத தொடக்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.