சினிமா

கார்த்தியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

கார்த்தியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

webteam

நடிகர் கார்த்தி நடிக்க உள்ள புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். 

இயக்குநர்  பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் நடிகை சயிஷா, பிரியா பவானி சங்கர் என இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இதனை  சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் கார்த்தி விவசாயி வேடத்தில் நடிக்கிறார்.இப்படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. வேல்ராஜ் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். 

இதனை அடுத்து புதிய படத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை அறிமுக இயக்குநர் ரஜத் இயக்குகிறார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தியின் படங்களுக்கு இதுவரை இவர் இசையமைத்ததில்லை. கோலிவுட்டில் முதன்முறையாக ஜோடி சேர்கிறது இந்தக் கூட்டணி.