மாரி2 படக்குழுவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் இணைந்துள்ளதாக இயக்குநர் பாலாஜி மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் பாலாஜி மோகன், தனுஷ், அனிருத் கூட்டணியில் 2015-ம் ஆண்டு வெளிவந்த மாரி. காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் இசை ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 'மாரி 2' படத்தின் பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக பாலாஜி மோகன் அறிவித்து இருந்தார்.
இரண்டாம் பாகத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுவாரா எனக் கேள்வி எழுந்தது. பின்னர் ஷான் ரோல்டன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிப்பட்டது. இருப்பினும் சில தினங்களுக்கு மாரி2 படத்தில் யுவன் சங்கர் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா மாரி படத்தில் இணைவதை இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் தனது ட்விட்டரில், “எனக்குப் பிடித்த ஆல்-டைம் இசையமைப்பாளர்களுள் ஒருவருடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். மாரி2 டீமில் யுவன் சங்கர் ராஜா இணைவதை மகிழ்ச்சியோடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். இசைப்பணிகள் தொடங்கிவிட்டன” என்று பதிவிட்டுள்ளார். தனுஷ் மற்றும் யுவன் கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாலாஜி மோகன் பதிவை ரீட்விட் செய்துள்ள யுவன், மாரி2 படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். மாரி2 படத்தில் யுவன் இணைந்துள்ள செய்தி இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாக உள்ளது.