சினிமா

‘சிலம்பரசன்’ முதல் ‘எஸ்டிஆர்’ வரை - சிம்பு குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்

‘சிலம்பரசன்’ முதல் ‘எஸ்டிஆர்’ வரை - சிம்பு குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்

webteam

இப்போது எஸ்டிஆர். அதற்கு முன்பு சிம்பு. அதற்கு முன்னால் சிலம்பரசன். தன் விரும்பத்திற்கு ஏற்றது போல பெயரை சிம்பு மாற்றிக் கொண்டாலும் அவரிடம் மாறாத ஒரு விஷயம் உண்டு. அதான்.. எதையும் வெளிப்படையாக பேசுவது. இதனால் தனக்கு பிரச்னை வரும் என தெரிந்தாலும் மனம் திறந்து பேசுவது. இதான் சிம்புவின் அஃமார்க் அடையாளம். அவருக்கு இன்று பிறந்தநாள். நேற்று இரவில் இருந்தே அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் குதித்து விட்டார்கள்.

‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆக அறிமுகமானதில் இருந்து இன்று பெரிய ஸ்டாராக வலம் வருவது வரை தமிழ் சினிமாவில் சிம்பு ஒரு தனி அடையாளம். சில வருடங்களாக அவர் நடிக்காமல் இருந்தபோதும் கூட அவரை விட்டு அவரது ரசிகர்கள் அகலாமல் இருந்ததை கண்டு பல நடிகர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளனர். முதலில் விஜய டி ராஜேந்தரின் மகனாக அவர் திரைதுறையில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த அடையாளம் அவருக்கு கொஞ்ச காலத்திற்குதான் உதவியது.

அதனையெல்லாம் தாண்டி, இன்று தந்தையை மீறி செல்வாக்கு நிறைந்தவராக உச்சத்திற்கு வந்துள்ளார். அப்பாவினால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, ‘காதல் அழிவதில்லை’ மூலம் தனித்த நாயகனாக முகம் காட்ட தொடங்கினார். அதன் பின் பல படங்கள் அவருக்கு வெற்றியாக அமைந்தன. வெற்றி எந்த அளவுக்கு சிம்புவிற்கு கிடைத்ததோ அதே அளவுக்கு வம்பும் அவரது வாழ்க்கையில் வலைப் போல் பின்னிக் கிடந்தது.

அதில் காதல் தோல்வி, படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்பவை முக்கியமாக பேசப்பட்டன. ஆனால் அதை கடந்து சிம்பு இன்றும் திரைத்துறையில் மறுக்க முடியாத ஒரு நடிகராக துணிந்து நிற்கிறார். சிம்புவின் இந்த இனிய பிறந்த நாளில் அவரைப் பற்றிய ஐந்து சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

சாப்பாட்டு பிரியர் சிம்பு

சிம்பு விதவிதமாக சாப்பிடுவதில் அதிக விரும்பம் உள்ளவர். அதுவும் அவருக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். சில நாட்களில் அவர் காலை உணவாகவே பிரியாணியை சாப்பிடும் அளவுக்கு அதற்கு அடிமை ஆனார். பிரியாணி வகைகளிலேயே சிக்கன் பிரியாணி அவருக்கு அதிகம் பிடிக்கும். ஒருவேளை படப்பிடிப்பு நடக்கும் இடங்களின் அருகே நல்ல பிரியாணி உள்ளது என்பதை தெரிந்து கொண்டால் அடுத்த நொடி அந்த பிரியாணியை அவர் சுவைத்து விடுவார். இதை அவரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

ஹாலிவுட் பிரியர்

தமிழில் தர லோக்கல் அளவுக்கான படங்களில் சிம்பு நடித்துள்ளார். அதை அவர் தனது பாணியாகவே வைத்துள்ளார். அதனை அவர் எப்போதும் தாழ்வாக நினைத்ததே கிடையாது. ஆனால் தன் படங்கள் எப்படி இருந்தால் என்ன? அவர் விரும்பி பார்ப்பவை என்னவோ ஹாலிவுட் படங்களைதான். 'The Godfather' படத்தின் நாயகன் Al Pacino மற்றும் 'The Bucket List' படத்தின் நாயகன் Morgan Freeman ஆகியோரின் வெறித்தனமான ரசிகர் சிம்பு. ஹாலிவுட் படம் ஒன்று புதியதாக வெளியானால் அதற்கு முதல்நாள் முதல் ஷோவில் போய் உட்கார்ந்துவிடுவார். தமிழ் சினிமா என வந்தால் அவர் ‘தல’ ரசிகர். அஜித் விஷயத்தில் அவர் ரசிகர் மட்டும் இல்லை அவரது வாழ்க்கை பாணியையும் தன் வாழ்க்கையில் தரமாக கடைப்பிடித்து வருகிறார்.

நண்பர்கள் நிறைந்த வாழ்க்கை

சிம்புவின் பலமே அவரது நண்பர்கள்தான். சின்ன வயதில் இருந்தே தன்னுடன் பழகிய நண்பர்களை இப்போது பக்கத்திலேயே வைத்துள்ளார் சிம்பு. அதில் சாதப்பன், மகத் மற்றும் தீபன் ஆகியோர் அவரது சிறு வயது நண்பர்கள். எந்நேரமும் சிம்புவுடனேயே இருக்கும் நண்பர்கள் யார் என ஒரு பட்டியல் போட்டால் அதில் நிச்சயம் இந்த மூவரும் இருப்பார்கள். இதில் மகத் மட்டும் சிம்புவுடன் பல பயணங்களில் அதிக நெருக்கமாக இருக்கிறார்.

பல திறமை கொண்டவர்

பாடுவார். இசையமைப்பார். இயக்குநர் அனுபவமும் உண்டு. இதை மீறி பெரிய அடையாளம் என்றால் நடிகர். கெளதம் மேனன் இவரை பாலிவுட் அளவுக்குப் பெரிய நடிகராக வர வேண்டியவர் என்பார். இவரைப் போலவே தம்பியையும் இசைத்துறையில் கொண்டுவர வேண்டும் என விரும்பியவர். தங்கை என்றால் கொள்ளை உயிர். திருமணம் முடிந்து தங்கை மறுவீட்டிற்கு போன அன்று பிரிவை தாங்காமல் சிம்பு இரவு முழுவதும் அழுததாக ஒரு செய்தி உண்டு. அந்தளவுக்கு பாசமுள்ள நெஞ்சம் கொண்டவர் சிம்பு. இளம் தலைமுறையில் பல இசையமைப்பாளர்களை சிம்புவிற்குப் பிடிக்கும். முதலில் யுவன். இப்போது அனிருத். முன்பு சிம்புவும் அனிருத்தும் இணைந்து தயாரித்து வைத்திருந்த பாடல் ஒன்று லீக் ஆகி, பெரிய சர்ச்சையானது. அப்போது கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் தான் மட்டுமே காரணம். அனிருத்திற்கு தொடர்பு இல்லை என்ற பெரிய மனசுக்காரர்.

ஆல் டைம் ஃபேவரைட்ஸ்

பலரை பிடிக்கும். பலர் மீது அன்பு உண்டு. ஆனால் அதில் எல்லாம் தலையானவர் ரஜினி. சிம்புவின் ஆல் டைம் ஃபேவரைட்ஸ் யார் என்றால் அது ரஜினிதான். அவர் சூப்பர் ஸ்டார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார். ஆகவேதான் ‘தர்பார்’ முதல் நாள் முதல் காட்சியில் போய் உட்கார்ந்தார் சிம்பு. ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் பல கால கனவு. அதை அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.