சின்ன பட்ஜெட்டில் உருவாக்கி சாதனை வசூலை செய்த பல படங்களை இந்த ஆண்டு நாம் பார்த்துவிட்டோம். தமிழில் வெளியான ப்ளாஸ்ட் துவங்கி சைனீஸ் படமான Niu Lai வரை இந்த லிஸ்டில் இருக்கிறது. இப்போது இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கிறது ஒரு இந்தி படம். விஷால் சதுர்வேதி இயக்கியுள்ள இந்திப் படம் `Hanuman Ansh'தான் அந்தச் சாதனை படம். ஆன்மிக குருவான நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் ஷோபினாவ் சத்யா, விஹான் ஷெட்ஜ், சந்தன் கே. ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெரிய நட்சத்திரங்கள், பல கோடி ரூபாய் பட்ஜெட் இல்லாமலேயே ஒரு படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்க முடியும் என்பதை ‘Hanuman Ansh’ திரைப்படம் நிரூபித்துள்ள இந்தப் படம் துவக்க நாட்களில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. . ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு முதல் நாளில் வெறும் ₹10 லட்சம் மட்டுமே வசூலானது. முதல் இரண்டு வாரங்களின் முடிவிலும் படம் சுமார் ₹1.48 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இதனால் படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாவது வாரத்தில் நிலைமை முற்றிலும் மாறியது. ரசிகர்களின் Word of Mouth காரணமாக திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. நான்காவது வாரத்தில் மட்டும் படம் சுமார் ₹61 கோடி வசூலித்ததாகச் சொல்லப்படுகிறது. 30-வது நாளில் மட்டும் சுமார் ₹16.25 கோடி வசூலித்துள்ளது ‘Hanuman Ansh’.
ஆகஸ்ட் 7, செப்டம்பர் 7ம் தேதி, அதாவது சரியாக படம் வெளியாகி ஒரு மாதத்தின் முடிவில் 100 கோடி வசூல் என்ற மைல்கல்லை கடந்தது. இதன்மூலம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ₹100 கோடி கிளப்பில் இணைந்த முக்கியமான இந்திப் படமாக இது மாறியுள்ளது. பெரிய ஹீரோ, பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் அல்லது பல நூறு கோடி பட்ஜெட் இல்லாமல், ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் வலுவான கதைக்களம் மூலமாக இப்படம் ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. ஆரம்பத்தில் குறைந்த திரையரங்குகளில் வெளியான படம், ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான திரையரங்கு காட்சிகளுக்கு விரிவடைந்தது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி இப்படத்தின் வசூல் **₹100 கோடியைத் தாண்டி ₹144.40 கோடி வரை சென்றுள்ளதாகவும், ₹200 கோடி கிளப்பை நோக்கி படம் நகர்வதாகவும் தெரிவிக்கின்றன பாலிவுட் வட்டாரங்கள். வெறும் ₹2 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்த இந்தி திரைப்படம், இந்தியாவில் ₹100 கோடி நிகர வசூலை கடந்துள்ளது, விரைவில் 200 கோடி வசூல் செய்ய உள்ளது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது