தமிழில் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும் இவர்களுடைய திருமண வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் ஆவணப்படமாக ஒளிபரப்பானது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. குறிப்பாக, இவர்களுடைய காதல் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின்கீழ் ஒரு கனவு திருமண முன்மொழிவைக் காண்பிப்பதில் இருந்து அவர்களின் ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்கள் வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தது.
ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து வருவதாக சமீபகாலமாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஹன்சிகா சமீபகாலமாக தனது தாயாருடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை சோஹைல் சமீபத்தில் மறுத்திருந்தார். இந்த நிலையில், சோஹைல் உடன் இருந்த திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஹன்சிகா நீக்கியுள்ளார்.
இதனால் இவர்கள் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து எந்தத் தகவலையும் இருவரும் உறுதிப்படுத்தவில்லை.