சினிமா

’உங்க ஹிஸ்டரி எங்ககிட்ட இருக்கு’ : பிரபல நடிகைக்கு பிளாக்மெயில்!

’உங்க ஹிஸ்டரி எங்ககிட்ட இருக்கு’ : பிரபல நடிகைக்கு பிளாக்மெயில்!

webteam

பிரபல இந்தி நடிகையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகை, தீப்தி நேவல் (66). இவர், ஏக் பார் பிர், சாத் சாத், ஹம் பாஞ்ச், லீலா, யாத்ரா, பிராக் உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். பல மாற்று சினிமாக்களிலும் நடித்துள்ள இவர், இயக்குனரும் கூட. கடந்த செவ்வாய்க்கிழமை இவருக்கு ஒரு மெயில் வந்தது. 

அதில், ’கடந்த சில நாட்களாக நீங்கள் எந்தெந்த இணையதளங்களை பார்க்கிறீர்கள். இணையத்தில் என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களது சில அந்தரங்க வீடியோவும் எங்களிடம் உள்ளது. நீங்கள் இணையத்தில் எந்தெந்த பக்கங்களை பார்க்கிறீர்கள் என்பதையும் உங்களைப் பற்றியும் வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் 5,600 டாலரை இன்னும் 24 மணி நேரத்தில் எங்களுக்கு அனுப்ப வேண்டும் ’ என்று மிரட்டலுடன் கூறப்பட்டிருந்தது. மேலும், ’உங்கள் மெயில் பாஸ்வேர்ட் இதுதானே...’ என்று அதையும் மிகச்சரியாக குறிப்பிட்டிருந்தனர்.

அந்த பாஸ்வேர்ட் அவர் பயன்படுத்துவதான் என்பதால் அதிர்ச்சி அடைந்தார் தீப்தி. இதையடுத்து மும்பை போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள், ’இது போலியான மெயில், அவர்களிடம் எந்த வீடியோவும் தகவலும் இருக்காது, அது சும்மா மிரட்டப்படுவதற்காக வருவது. அதுபற்றி விசாரிக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம் ’ என்று கூறி அனுப்பியுள்ளனர்.

இதுபற்றி தீப்தியிடம் கேட்டபோது, ’அதைப் பற்றி இப்போது எதையும் பேசவிரும்பவில்லை. போலீசார், அதை கண்டுகொள்ளவேண்டாம். விசாரிக்கிறோம் என்று கூறிவிட்டனர்’ என்றார்.

மும்பை சைபர் கிரைம் விசாரணை அதிகாரி ரிதேஷ் பாட்டியா கூறும்போது, ‘எனக்கும் கூட மூவாயிரம் டாலர் கேட்டு மெயில் வந்திருக்கிறது. அது போலியானது என்பதால் கண்டுகொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.