தேசிய விருதுபெற்ற ஜி.வி.பிரகாஷுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பியானோ ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். 2006-ஆம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ’இட்லி கடை’ படத்திற்கும் இவரே இசையமைத்துள்ளார். அதேநேரத்தில், ஒரு நடிகராகவும் அவர் வலம் வருகிறார். ஒரேநேரத்தில் நடிப்பு மற்றும் இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தனுஷின் ‘வாத்தி’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் 2-வது முறையாகப் பெற்றார். முன்னதாக, நடிகர் சூர்யாவின்’சூரரைப் போற்று’ படத்திற்காக அவர் பெற்றிருந்தார். இதனையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்ததுடன், ஓர் அழகிய வெண்ணிற பியானோவையும் பரிசாக வழங்கியுள்ளார். அவர் வழங்கிய இந்தப் பரிசு குறித்து ஜி.வி.பிரகாஷ், ”இது எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த பரிசு. இது ரஹ்மான் பயன்படுத்திய பியானோ. இதைவிட வேறு என்ன சிறந்த பரிசை நான் கேட்டுவிட முடியும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் மூத்த சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானாவின் மகன்தான் இந்த ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.