சினிமா

ஜிவி பிரகாஷின் ‘செல்ஃபி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷின் ‘செல்ஃபி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சங்கீதா

ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்த ‘செல்ஃபி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தற்போது அதிகளவில் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘செல்ஃபி’. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குநர் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் இடஒதுக்கீடுக்கு பேரம் பேசும் தாதாவாக அவர் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

‘செல்ஃபி’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வி கிரியேஷன்ஸ் மற்றும் டிஜி ஃபிலிம் கம்பெனியின் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள ‘செல்ஃபி’படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப்படத்தை ஏப்ரல் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.