‘ஜோக்கர்’ படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் குரு சோமசுந்தரம். இவரது நடிப்பில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் சமகால அரசியலை நையாண்டி செய்தது. ஒரு கழிப்பறை கட்டுவதற்காக கிராம புற மக்கள் எத்தனை அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை உயிரோட்டமாக பதிய வைத்தது. அதேபோல ‘ஆரண்ய காண்டம்’திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனால் குரு சோமசுந்தரம் தனித்துவமான நடிகராக அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினி படத்தில் குரு நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டேராடூன் உட்பட பல இடங்களில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதன்முறையாக ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா போன்றோர் நடித்து வருகிறார்கள். இந்த நட்சத்திர பட்டாளத்துடன் இப்போது குரு சோமசுந்தரமும் இணைந்துள்ளார். இந்த நடிகர்கள், நடிகைகள் போலவே ரஜினியுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம், இசையமைப்பாளர் அனிருத்தும் முதன்முறையாக இணைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கபடவில்லை. ஆகவே சமூக வலைத்தளங்களில் ‘தலைவர்165’ என்ற ஹேஷ்டேக் போட்டு குறிப்பிடப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.