மம்தா பானர்ஜி web
சினிமா

"தியேட்டர்களில் தினமும் ஒரு வங்காள மொழி படம் கட்டாயம்.." மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு!

அனைத்து திரையரங்குகளிலும் தினமும் ஒரு வங்காள மொழித் திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அரசியலை தாண்டி இந்த உத்தரவு வங்க சினிமாவுக்கு புத்துயிரூட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

PT WEB

அனைத்து திரையரங்குகளிலும் தினமும் ஒரு வங்காள மொழித் திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. வங்க மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

சமீபத்தில் அவர் தொடங்கிய 'வங்க மொழி இயக்கத்'தின் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்த உத்தரவின்படி வங்கத்தின் அனைத்து திரையரங்குகளிலும் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலான முக்கிய நேரத்தில் ஒரு வங்கமொழி திரைப்படமேனும் திரையிடப்பட வேண்டும்.

மம்தா பானர்ஜி

மம்தாவின் இந்த உத்தரவுக்குப் பின்னால் பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் அரசியல் காரணம் மட்டுமல்ல. இந்தி மொழி ஆதிக்கத்திலிருந்து வங்க மொழியையும் இந்தி படங்களின் ஆதிக்கத்திலிருந்து வங்கமொழி சினிமாவின் செல்வாக்கையும் மீட்கும் நோக்கமும் இருப்பதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழி உணர்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இந்திக்கு அடுத்ததாக அதிக மக்களால் பேசப்படுவது வங்காள மொழி. இந்தியாவில் 10 கோடி பேர் வங்கம் பேசுகிறார்கள். மேற்கு வங்கத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கையும் பிற மாநிலங்களைவிட அதிகம்.

வங்க மொழி சினிமாவின் மரபை காலிசெய்யும் இந்தி படங்கள்..

வங்க மொழி சினிமா மரபு ஒரு காலத்தில் இந்திய சினிமாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது. சதய்ஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டக் போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப் பிதாமகர்கள் வங்கத்தின் மைந்தர்களே. உத்தம் குமார், சுசித்ரா சென் போன்ற நட்சத்திரங்களின் காந்த ஈர்ப்பும் வங்க மொழி சினிமாவுக்குப் பெரும் பலமாக இருந்தன. 1970களிலும் 1980களிலும் பதேர் பாஞ்சாலி ((Pather Panjali)), ‘புவன் ஷோம்’ ((Bhuvan Shom)), ’மேகே தாக தாரா’ ((Meghe Dhaka Tara)) என உலக அரங்கில் இந்திய சினிமாவை என்றென்றைக்கும் பெருமிதம்கொள்ள வைத்த கிளாசிக் படைப்புகள் வங்கத்தின் கொடைகள்தாம்.

பதேர் பாஞ்சாலி - Pather Panjali

ஆனால் 1980களுக்குப் பின் பாலிவுட்டிலிருந்து இறக்குமதி ஆகும் இந்திப் படங்களின் ஆதிக்கத்தால் வங்க சினிமா வணிகரீதியாக கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. படிப்படியாக தீவிரமடைந்த இந்த சரிவு இப்போது வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 2014இல் சுமார் 150 கோடி ரூபாயாக இருந்த வங்க சினிமாக்களின் வருவாய் 2023இல் 66 கோடியாக சரிந்துவிட்டது.

மகாராஷ்டிரா சினிமா மரபையும் பாதிக்கும் இந்தி படங்கள்..

கிழக்கே வங்கம் என்றால் மேற்கே மகாராஷ்டிரத்தில் மராத்தி சினிமா மரபுக்கு மதிப்புமிகு பாரம்பரியம் உண்டு. மகேஷ் மஞ்ச்ரேக்கர் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனத்தைப் பெற்றன.

புகழ்பெற்ற பாலிவுட் நடிகர்களான நானா படேகர், சச்சின் கெடேகர் போன்ற பலர் மராத்திய படங்களிலும் நடித்து வருகிறார்கள். இந்தி சினிமாக்களை உருவாக்கும் பாலிவுட்திரையுலகமும் மும்பையிலிருந்தே இயங்குகிறது. உலகின் பல நாடுகளில் பாலிவுட் இந்திப் படங்கள்தான் இந்திய சினிமா என்று பார்க்காப்படும் சூழலில் மராத்திய படங்கள் மகாராஷ்டிரத்துக்குள்ளேயே செல்வாக்கை இழந்துவருகின்றன.

தியேட்டர்

இதுபோல் பல நிலங்களில் அந்தந்த மாநில மொழி சினிமாக்களை இந்திசினிமா படிப்படியாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.தென்னிந்தியா மட்டுமே பாலிவுட்டின் கவர்ச்சிக்கும் செல்வாக்குக்கும் அணைபோட்டுத் தடுத்திருக்கிறது. அரசியல் ரீதியாக இரண்டாவது பெரியமாநிலம் மகாராஷ்டிரா. அங்கேயும் மராத்தி படங்களை விட, இந்திபடங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

மொழியின் மீது ஒரு சமூகம் அக்கறை கொள்வது மட்டுமல்ல. தன்னுடைய தாய்மொழி முக்கியம் என்பதை அனைத்து தளங்களிலும் கவனமான முன்னெடுப்புகள் மூலம் உறுதிசெய்வது எந்தளவுக்கு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.