சினிமா

புகழ்பெற்ற ஆர்.கே.ஸ்டூடியோவை கோத்ரெஜ்-க்கு விற்றது கபூர் குடும்பம்!

webteam

மும்பையில் புகழ்பெற்ற ஆர்.கே. ஸ்டூடியோவை, கோத்ரெஜ் நிறுவனத்துக்கு கபூர் குடும்பம் விற்றுள்ளது.

பழம்பெரும் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜ் கபூர். இவர், 1948 ஆம் ஆண்டில் மும்பை செம்பூர் பகுதியில் ஆர்.கே பிலிம்ஸ் மற்றும் ஸ்டுடியோவை தொடங்கினார். இந்த ஸ்டுடியோ தொடங்கப்பட்டு 71 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ராஜ் கபூர் மறைவுக்குப் பிறகு ஆர்.கே ஸ்டுடியோவை அவரது மகன்கள், ரன்தீர் கபூர், ரிஷி கபூர் மற்றும் ராஜீவ் கபூர் நிர்வகித்து வந்தனர். இந்த ஸ்டூடியோவில் ஏராளமான ஹிட் படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. 

(ரிஷி கபூர்)

2017ஆம் ஆண்டு ஆர்.கே ஸ்டுடியோவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் டிவி நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் நடத்தும் சில முக்கிய அரங்கங்கள் தீயில் சேதமடைந்துவிட்டன. இதன் பின்னர் அந்த ஸ்டுடியோவின் வருவாய் படிப்படியாக குறையத் துவங்கிவிட்டது. இழப்புகள் அதிகமாகி, வருவாய் குறைந்ததால், ஸ்டுடியோவை நிர்வகிப்பது சிரமமானது.

இந்நிலையில், ஆர்.கே ஸ்டுடியோவை விற்கும் முடிவுக்கு கபூர் குடும்பத்தினர் வந்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த வருடம் ரிஷி கபூர் கூறும் போது, “ஆர்.கே ஸ்டுடியோவை பரமாரிப்பது பெரிய வேலை. அதை சீரமைப்பு செய்யும் அளவுக்கு வருமானம் இல்லை” என தெரிவித்திருந் தார். 


இந்நிலையில், கபூர் குடும்பத்தினர் கோத்ரெஜ் நிறுவனத்துக்கு ரூ.250 கோடிக்கு இந்த ஸ்டூடியோவை விற்றுள்ளனர். 2.2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த ஸ்டூடியோ, செம்பூரின் அடையாளமாக இருந்தது. 

விற்றது தொடர்பாக நடிகர் ரன்தீர் கபூர் கூறும்போது, ’’கடந்த ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே விற்றுவிட்டோம். அதற்கு முக்கிய காரணம், அதை நிர்வகிக்க முடியவில்லை என்பதுதான். எங்கள் தந்தை இதை கட்டினார். எங்களுக்கு இந்த ஸ்டூடியோவுடன் உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம் இருக்கிறது. இந்த இடத்தை வாங்கியுள்ளவர்களுக்கு வாழ்த்துகள்’’ என்றார்.

(ரன்தீர் கபூர்)

இந்த இடத்தை வாங்கியுள்ள கோத்ரெஜ் நிறுவனம், இங்கு ஆடம்பர அடுக்குமாடி கட்டிடத்தை கட்ட இருக்கிறது.