மதராஸி புதியதலைமுறை
சினிமா

'மதராஸி' என்ற தலைப்பு ஏன்? எஸ்.கே கெட்டப்பின் ஸ்பெஷல்? - இயக்குநர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யம்!

சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தின் டைட்டிலும், க்ளிம்ப்ஸ் வீடியோவும் நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

PT WEB

சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தின் டைட்டிலும், க்ளிம்ப்ஸ் வீடியோவும் நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது அந்தப் படம் குறித்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் மதராஸி என்ற தலைப்பு பற்றி கூறிய முருகதாஸ் ”இந்தக் கதை வட இந்திய கதாப்பாத்திரங்களின் பார்வையில் இருந்து துவங்குகிறது. மதராஸி என்ற பதம், வட இந்தியர்கள், தென் இந்தியர்களை குறிப்பிட பயன்படுத்துவது. இப்போது அந்த வழக்கு குறைந்துவிட்டாலும், இப்படம் வடக்கில் உள்ளவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றியது, எனவே இப்படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்.” என்றார்.

சிவகார்த்திகேயன்

படத்தின் சிவாவின் தோற்றம் பற்றி கூறியவர் ”சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருகிறார், இப்படம் அவரை வேறொரு லெவலுக்கு எடுத்து செல்லும். இதில் அவரது தோற்றம் சற்று கரடு முரடாகவே இருக்கும். ஏனென்றால் அவரது கதாப்பாத்திரமே, தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம், அதற்குள் ஒரு காதல் கதையும் இருக்கும்.” என்றார்.

கஜினியில் மெமரி லாஸ், துப்பாக்கியில் ஸ்லீப்பர் செல்ஸ் போன்ற ஸ்பெஷல் விஷயம் இருந்தது போல இப்படத்திலும் தனித்துவமான விஷயம் இருக்கிறது என்பதை உறுதி செய்தார், ”இப்படத்தில் அந்த தனித்துவமான விஷயம் சிவகார்த்திகேயனின் கதாப்பாத்திரம் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அதை வெளிப்படையாக கூற இது சமயம் இல்லை. என்னால் சொல்ல முடிந்த ஒன்று, அவரது கதப்பாத்திரம் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும்.” என்று கூயிருக்கிறார்.

துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் வித்யுத் ஜம்வாலை தமிழுக்கு அழைத்து வந்தது பற்றி கூறியவர் வித்யுத் ஜம்வால் பற்றி பேசும் போது, “வித்யுத் வடக்கில் இருக்கும் ஹீரோக்களின் படங்களில் கூட வில்லனாக நடிக்க மறுத்தவர். ஆனால் இப்படத்திற்காக நான் அவரை அழைத்த போது, வெறும் போன் காலிலேயே வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்தார். படத்தின் கதையை விவரிக்க நான் அவரை சந்தித்த போது கூட, இது என்ன மாதிரியான கதையாக இருந்தாலும் நான் நடிக்கிறேன் என்றார். கதையைக் கேட்டதும், அவருக்கு மிகவும் பிடித்தது.” என்றார்.

அனிருத்தின் இசை பற்றி கூறிய போது, “க்ளிம்ஸ் வீடியோவுக்கு அனிருத் இரு ட்யூன்களைக் கொடுத்தார். அதில் ஒன்று தான் க்ளிம்ஸில் பயன்படுத்தினோம். இன்னொன்று படத்தின் டைட்டிலுடன் அருமையாக இருந்தது. ஆனால் வீடியோவில் ஃபாஸ்ட் கட்ஸ் இருந்ததால், அதனைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே அதனைப் படத்தில் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம். படத்தின் பாடல்களும் பதிவாகிவிட்டது, ஒரு பாடலுக்கு மட்டுமே பாக்கி. அதற்கும் ட்யூனை லாக் செய்துவிட்டோம்.” என்றார்

”படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் 12 நாட்கள், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் படமாக்க வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்தி செய்யும் படமாகவும், விமர்சன ரீதியிலுல்ம் வரவேற்பைப் பெரும் படமாகவும் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.