தனது குரு மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பெருமையுடன் கூறியிருக்கிறார், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கவேண்டும் என்பது மணிரத்னத்தின் பெருங்கனவு. தற்போதுதான், அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த 2019 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது.
கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது. ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அனைத்து நடிகர்களையும் வைத்து பிரம்மாண்டப் பாடல்காட்சி எடுக்கப்பட்டது. இப்பாடலுக்கு நடனம் அமைத்தவர் பிருந்தா மாஸ்டர். மணிரத்னத்தில் பெரும்பாலான படங்களில் பிருந்தா மாஸ்டர்தான் நடனம் அமைப்பார். ’கடல்’ படத்தில் நடனத்திற்கு பெரும் வரவேற்பை பெற்ற ’பல்லாங்குழி பாத புரியல’ பாடலைக்கூட இவர்தான் வித்யாசமான நடன அமைப்பில் அமைத்து பாராட்டுக்களைக் குவித்தார்.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ பாடல் காட்சிக்கு நடனம் அமைத்துக்கொடுத்த மகிழ்ச்சியில், பிருந்தா மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ எனது குரு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி.ரவி வர்மனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமையாக வந்துள்ளன. ஏ.ஆர் ரஹ்மான் பாடலில் நடனம் அமைத்ததில் மேலும் மகிழ்ச்சி. என் பலம் என் நடனக்குழுதான்” என்று உருக்கமும் பெருமையும் கலந்து பதிவிட்டுள்ளார்.