சினிமா

‘ஜீனியஸ்’ - திரைப்படம் ஒரு பார்வை

webteam

பிள்ளைகளை படி, படி என சதா துன்புறுத்திக் கொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு பாடம் எடுக்கும் இயக்குநர் சுசீந்திரனின் முயற்சியே ‘ஜீனியஸ்’.

பிள்ளையின் மீது எந்த அக்கறையும் இல்லாத ஆடுகளம் நரேனுக்கு, எல்லாவற்றிலும் முதலாவதாக வரும் தனது மகனால் பெருமித போதை ஏற்படுகிறது. அதன்பிறகு, அந்தப் புள்ளியில் இருந்து மகன் விலகாது பயணிக்க வேண்டும் என்பதற்காக படிப்பு, படிப்பு என எப்போதும் அதில் மட்டுமே மூழ்கிகிடக்க செய்கிறார். பின்னர், அதுவே பல சிக்கல்களுக்கு காரணமாக அவர் மனம் திருந்தினாரா? என்பதே ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் கதை.

‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ என வித்தியாசமான படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை மிகு இயக்குநராக திகழ்ந்தவர் சுசீந்திரன். ஆனால், அவரது சமீபத்திய படைப்புகள் அவரா இயக்குநர் எனும் கேள்வியை எழுப்பியபடியே திரையில் ஒளிர்கிறது. கதையின் மீதுள்ள அதீத நம்பிக்கையால், அவரது படங்களில் யாரை வேண்டுமானாலும் நாயகனாக ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், அவரிடம் இருந்து கொஞ்சமேனும் நடிப்பையும் பெற வேண்டாமா? ரோஷன் சில இடங்களில் அதிகமாகவும், பல இடங்களில் எதுவுமே பண்ணாமலும் இருக்கிறார்.

தனது மகன் எதிலும் தோற்கக்கூடாது எனும் தவிப்புடன் சமகால அப்பாக்களை பிரதிபலிக்கும் ஆடுகளம் நரேன், பிற்பாதியில் அதுவே பிரச்னையாக மாற கலங்கித் தவிக்கிறார். அவரைப் போலவே, பிரியா லால் நடிப்பும் யதார்த்தமாக மனதில் பதிகிறது. சில காட்சிகளே வந்தாலும், சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீங்களும் ஊரும், ‘விளையாடு மகனே’ போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் அதே பழைய யுவன். குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான வண்ணங்களை கொடுக்கிறது. 1.45 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய திரைப்படத்தில் இன்னும் சில காட்சிகளின் நீளத்தைக் கூட படத்தொகுப்பாளர் தியாகு குறைத்திருக்கலாம்.

கல்விப் பிரச்னைகளை பேசும் படமாக தொடங்கி இடையில் கொஞ்சம் தடம் மாறி பயணித்து அயர்ச்சியை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இன்றையச் சூழலில் அவசியமான ஒரு கருவை கையிலெடுத்த இயக்குநர், திரைக்கதைக்கு இன்னுமின்னும் மெனக்கெட்டிருந்தால் நிச்சயம் செண்டம் அடித்திருப்பான் இந்த ‘ஜீனியஸ்’.