கௌதம் மேனன், சூர்யா pt web
சினிமா

“சூர்யா வேண்டாம்னு சொன்னதுதான் உண்மையில் வருத்தம்” - துருவ நட்சத்திரம் குறித்து GVM வேதனை!

துருவ நட்சத்திரம் திரைப்படத்தை சூர்யா வேண்டாம் என சொன்னதுதான் உண்மையிலேயே வருத்தாம இருந்தது என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

துருவ நட்சத்திரம்

கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது.

ஆனால், பல்வேறு திருப்பங்களை படம் கண்டபோதும் பல சிக்கல்களால் தற்போதுவரை ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகவில்லை. கடந்த சில மாதங்கள் முன் திரைப்படம் வெளியாகாதது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “எல்லா தடைகளையும் தாண்டி உங்களுக்காக துருவ நட்சத்திரத்தை திரையரங்குகளில் வெளியிட எங்களால் முடிந்த, எங்கள் சக்திக்கு மீறிய அனைத்தையும்கூட செய்து வருகிறோம். படம் ரிலீஸாகி, உங்களோடு படத்தை பகிர்ந்துக்கொள்ளும் நாளுக்காக எங்களால் இதற்கு மேலும் காத்திருக்கமுடியாது!” எனத் தெரிவித்திருந்தார்.

மதகஜராஜா உத்வேகம்

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவை தற்போது வரை ரூல் செய்து வருகின்றன. படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதும் குறைந்துவிடவில்லை. சமீபத்தில் மதகஜராஜா திரையரங்கிற்கு வந்தபோதுகூட, துருவநட்சத்திரம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவிக்காமல் இல்லை.

துருவ நட்சத்திரம்

இந்நிலையில்தான், நேர்காணல் ஒன்றில் துருவ நட்சத்திரம் குறித்து பேசியுள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். அதில், “துருவ நட்சத்திரம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும். துருவ நட்சத்திரத்தை நான் இன்னும் பிடித்து வைத்திருக்கிறேன் என்றால் இப்போதும் அந்த படம் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்ட புதிய படம்போல்தான் இருக்கிறது என்பதால்தான். 2018 ஆம் ஆண்டில் எடுத்து முடிக்கப்பட்ட படம் போல் துருவநட்சத்திரம் இல்லை. மதகஜராஜா அவ்வளவு நன்றாக திரையரங்குகளில் ஓடுகிறது என சொல்கிறார்கள். அதனால் இன்னும் மகிழ்ச்சி அடைகிறேன். அது இன்னும் உத்வேகமாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.

சூர்யா நடித்திருக்கலாம்...

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யா நடிக்காதது குறித்து பேசிய அவர், “நடிகர்கள் சில படங்களில் நடிக்க ஒத்துக்கொள்ளமுடியாதது எனக்குப் புரிகிறது. சூர்யா துருவ நட்சத்திரத்தில் நடிப்பதற்கு யோசித்திருக்கவே கூடாது என்றுதான் நான் நினைத்தேன். ஏனென்றால், காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் என இரண்டு திரைப்படமும் அப்படித்தான் ஆரம்பமானது. ஒரு ஐடியா இருந்தது; அதை ஸ்க்ரிப்டாக மாற்றினோம். அதன்பின் இணைந்து பணியாற்றினோம்.

கோப்புப் படம்

நானா படேகர் மற்றும் மோகன்லால் இருவரிடம்தான் முதலில் அப்பா கதாப்பாத்திரத்தை (வாரணம் ஆயிரம்) நடிக்க சொன்னேன். எல்லோரும் அவர் அவர்களுக்கென்று ஒரு காரணத்தை சொன்னார்கள். இதன்பின் சூர்யா நானே அந்த கதாப்பாத்திரத்தை நடிக்கிறேன் என்றார். ஆனால், துருவ நட்சத்திரத்தை அவர் தேர்வு செய்யவில்லை. ஐடியா கேட்டார், கதை கேட்டார். நிறைய விவாதித்தோம். ஒரு கட்டத்தில் அவர் கதையை தேர்வு செய்யவில்லை. இந்த இயக்குநர்தானே காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இருபடங்களை எடுத்தார் என அவர் நம்பியிருந்திருக்கலாம் என்பதுதான் என் எண்ணம்.

உண்மையிலேயே வருத்தம்

நான் உதவியாகக்கூட கேட்கவில்லை, ஏற்கனவே 2 படங்களில் வேலை செய்துள்ளோம் என்ற நம்பிக்கைதான். தப்பாக எவ்வளவு தூரம் சென்றுவிடும் என்று கூட கேட்டேன். உங்களுக்கு அடுத்த படம் வராது என நினைக்கிறீர்களா? நான்தானே தயாரிக்கிறேன்; எனக்கு தானே பிரச்னை என அவ்வளவு கேட்டேன்.

அந்த படம் நடக்கவில்லை, வேறு யார் என்ன சொல்லி இருந்தாலும் கடந்து வந்திருப்பேன் என நினைக்கின்றேன். அவர் வேண்டாம் என சொன்னதுதான் உண்மையிலேயே வருத்தமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.