சினிமா

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காமல் இருப்பதா? ’அசுரன்’ பார்த்த 4 பேர் வெளியேற்றம்!

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காமல் இருப்பதா? ’அசுரன்’ பார்த்த 4 பேர் வெளியேற்றம்!

webteam

பெங்களூரில் ’அசுரன்’ படம் பார்த்தபோது தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத இளம் பெண்கள் உட்பட 4 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

தனுஷ், மஞ்சுவாரியம் நடித்த ’அசுரன்’ படம் பெங்களூரில் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஓரியன் மாலில் இந்த திரை யிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இந்தத் தியேட்டரியில் படம் ஓடத் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தியேட்டரில் இருந்தவர்கள் எழுந்து நின்றனர். 2 பெண்கள் உட்பட நான்கு பேர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. இதைக் கவனித்த கன்னட நடிகர் அரு கவுடா, அவர்கள் உட்கார்ந்திருந்ததை செல்போனில் வீடியோ எடுத்தார். 

பின்னர் அவரும் அவருடன் வந்திருந்த நடிகை ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களும், ’தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஏன், எழுந்து நிற்கவில்லை’ என்று கேட்டனர். அவர்கள் ஏதோ கூறினர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. ’நீங்கள் என்ன பாகிஸ்தானை சேர்ந்தவர்களா? 52 வினாடி இசைக்கப்படும் தேசியகீதத்துக்கு மரியாதை செய்யாமல், எதற்காக 3 மணிநேரம் ஓடும் படத்தை பார்க்க வந்தீர்கள்?’ என்று ஆவேசமாகக் கேட்டனர்.

பின்னர் அவர்கள் நான்கு பேரும் வெளியேற்றப்பட்டனர்.  இதுபற்றி போலீசில் புகார் ஏதும் கூறப்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.