சினிமா

பிரம்மாஸ்திரா முதல் விக்ரம் வரை... 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 படங்கள் என்னென்ன?

நிவேதா ஜெகராஜா

2020 -ம் கொரோனா பரவல் தொடங்கிய பின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு தியேட்டரில் படங்கள் வெளியாவது மிக மிக குறைந்தே காணப்பட்டது. ஓடிடி-யில் படங்கள் வெளியாகும் போக்கு நீடித்தது. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக 2022-ல் சரியாகத்தொடங்கியது. இதனால் இந்த 2022, திரைப்பட விரும்பிகளுக்கு கொண்டாட்ட வருடமாகவே அமைந்தது.

அதேநேரம், தியேட்டரில் ரிலீஸாகும் எல்லா படத்தையும் நேரடியாக திரையரங்கு சென்றுதான் பார்க்க வேண்டும் என்று மக்கள் நினைக்கவில்லை. மிகவும் யோசித்து, ரிவ்யூஸ் பார்த்து தேர்ந்தெடுத்துதான் சென்றனர். ஒருபடத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதா வேண்டாமா என்பதை அறிய அதற்கு கிடைத்த விமர்சனங்களையே மக்கள் அதிகம் பார்த்தனர். இந்த விமர்சனங்களை பார்ப்பதில் முக்கிய பங்கு, கூகுளுக்கு உள்ளது. அந்தவகையில் இந்த 2022-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியல்:

  • பிரம்மாஸ்திரா

  • ஜே,ஜி.எஃப் 2
  • தி காஷ்மீரி ஃபைல்ஸ்
  • ஆர்.ஆர்.ஆர்
  • காந்தாரா
  • புஷ்பா
  • விக்ரம்
  • லால் சிங் சத்தா
  • த்ரிஷ்யம் 2
  • தோர்: லவ் அண்ட் தண்டர்

இப்படியாக இந்த பட்டியலில் ரன்பீர் கபூர் - ஆலியா பட்டின் பிரம்மாஸ்திரா படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. பாலிவுட்டில் வெளியாகி, ஒருவாரத்திலேயே சுமார் ரூ.300 கோடி வசூல் செய்த இப்படம்தான், இவ்வருடம் அதிகம் தேடப்பட்ட படமாக முன்னிலையில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் கே.ஜி.எஃப் 2 படம் இருக்கிறது. கன்னடத்தில் உருவான கே.ஜி.எஃப் படம், இந்த வருடத்தில் இந்தியா முழுக்க அனைத்து மாநிலத்திலுமே மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த இடத்தில் `தி காஷ்மீரி ஃபைல்ஸ்’ திரைப்படம் உள்ளது.

இந்த பட்டியலிலுள்ள பத்து படங்களிலும், ஒரேயொரு படம் மட்டுமே தமிழ் படமாக உள்ளது. அது நடிகர்கள் கமல்ஹாசன் – ஃபகத் ஃபாசில் – விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம். இவர்களுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, காயத்ரி என பலர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அனிருத் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக்குவித்ததாக சொல்லப்படுகிறது.