சினிமா

தீபிகா படுகோன் மூக்கிற்கு விலை வைத்த மகாசபை!

தீபிகா படுகோன் மூக்கிற்கு விலை வைத்த மகாசபை!

webteam

’பத்மாவத்’ படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோன் மூக்கை வெட்டினால் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்படும் என கான்பூர் சத்ரிய மகாசபை அறிவித்துள்ளது. 

பிரபல நடிகை தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் நடித்துள்ள படம், ’பத்மாவத்’.  இந்தப் படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டதால் படம் இன்று வெளியாகிறது. ஹரியானா, டெல்லி உட்பட பல பகுதிகளில் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலவரம் நடந்துவருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பத்மாவத் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, கான்பூர் சத்ரிய மகாசபை அமைப்பினர், பத்மாவத் திரைப்படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனின் மூக்கை அறுத்துவந்தால் ரூபாயை கொட்டிக் கொடுப்போம்’  என்று அறிவித்துள்ளனர்.

அந்த அமைப்பின் தலைவர் கஜேந்திர சிங் ரஜாவத் கூறும்போது, ‘நாங்கள் கான்பூர்க்காரர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வருகிறோம். யார், தீபிகாவின் மூக்கை வெட்டி வருகிறார்களோ, அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கொட்டிக் கொடுப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.