சினிமா

நடிகராக புதிய அவதாரம்.. அண்ணாமலை நடித்த கன்னட படத்தின் டீசர் இன்று வெளியீடு!

சங்கீதா

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

32 வயதான கே.எஸ். விஸ்வாஸ் இரு கைகளை இழந்தநிலையிலும், பாரா நீச்சல் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இவர் 10 வயதாக இருக்கும்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் வேளாண் துறையில் எழுத்தராக இருந்த இவரது தந்தை சத்தியநாராயண மூர்த்தியுடன், இவர்கள் கட்டிக்கொண்டிருந்த வீட்டில் சிமென்ட் பூசப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி மின்வயர்களில் விழுந்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் இவரை காப்பாற்ற முயற்சித்தபோது அதில், அவரது தந்தை சத்தியநாராயண மூர்த்தி உயிரிழந்துள்ளார்.

பின்னர் அந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட விஸ்வாஸ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்கள் கோமாவில் இருந்தப் பிறகு, குணமடைந்துள்ளார். ஆனால் அந்த விபத்தில் அவரது இரண்டு கைகளை விஸ்வாஸ் இழந்துள்ளார். தந்தையை இழந்தநிலையில் அவரது குடும்பம் பெங்களூரு சென்றுள்ளது. அங்கு நம்பிக்கை இழக்காமல் பி.காம் பட்டப்படிப்பு முடித்தநிலையில், குங் பூ, நடனம், நீச்சல் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொண்டதுடன் சர்வதேச பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் சாதனை புரிந்து வருகிறார் விஸ்வாஸ்.

இவரின் கதையால் ஈர்க்கப்பட்ட பிரபல கன்னட திரையுலக இயக்குநர் ராஜ்குமார், விஸ்வாஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் தான் தமிழ்நாடு பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஸின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

திரைத்துறையை சாராத, அதேவேளையில் தனித்தன்மை வாய்ந்த ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவுசெய்து அண்ணாமலையிடம் கதையை கூறியுள்ளனர். இந்தக் கதையால் ஈர்க்கப்பட்ட அவரும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்து கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலா துணைப்பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளராக, கடந்த 2013-ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பணியை துவங்கிய அண்ணாமலை, அங்கு புகையிலை, குட்கா போன்ற போதை பொருள்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பிறந்த அண்ணாமலை, கர்நாடகாவில் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து இயற்கை விவசாயம் மேற்கொண்டார் அண்ணாமலை. பின்னர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்தநிலையில், தற்போது இளம் வயதிலேயே தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.