flag x page
சினிமா

உணர்வுப்பூர்வமான கதையில் தடுமாறும் திரைக்கதை.. | Flag Review | Master Deehan | Mickey Makhija

தேசபக்தியை வளர்ப்பது, நாட்டின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் போற்றுவதை நோக்கமாகக் கொண்ட படத்தை எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் பொன் சங்கர்.

Johnson

தாத்தா ஆசையை நிறைவேற்ற முயலும் பேரனின் கதையே FLAG.

வேலு (மாஸ்டர் தீஹன்) படிப்பில் பெரிய நாட்டமில்லாமல், நண்பர்களுடன் விளையாட்டு, பொழுதுபோக்கு எனச் சுற்றும் சிறுவன். விபத்து ஒன்றில் அவனின் பெற்றோர் இறந்துவிட, கர்நாடகாவில் உள்ள அவனது தாத்தா (மிக்கி மக்கிஜா) அவனை அதே மாநிலத்தில் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று, தன்னுடன் வைத்துக்கொண்டு, மெதுவாக அவனது மனச்சோர்விலிருந்து மீட்க முயல்கிறார். இந்த சூழலில் தாத்தாவும் திடீரென பக்கவாதம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த சூழலில், தான் பணிபுரியும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஏற்றுவதைக் காண வேண்டும் என்ற தனது தாத்தாவின் கனவை நிறைவேற்ற முடிவு செய்கிறான் வேலு. இந்தப் பயணம் அவனுக்கு எப்படியானதாக இருந்தது எனச் சொல்கிறது மீதிக்கு கதை.

தேசபக்தியை வளர்ப்பது, நாட்டின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் போற்றுவதை நோக்கமாகக் கொண்ட படத்தை எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் பொன் சங்கர்.

வேலுவாக நடித்திருக்கும் மாஸ்டர் தீஹன், அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான ஒருவித அப்பாவித்தனத்தோடு இருப்பது அந்தப் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு கொடுக்க உதவுகிறது. வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் பல இடங்களில் தவிப்பதும், எல்லோரையும் நம்புவதும், பணத்தை மறைப்பதன் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதும் என பல காட்சிகளில் நல்ல நடிப்பைக் கொடுக்கிறார். துணை நடிகர்கள் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தாத்தாவாக நடித்துள்ள மிக்கி மக்கிஜா தனது பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் நண்பர்களுடனான காட்சிகள், மனச்சோர்விலிருக்கும் சிறுவனை மீட்டெடுக்கும்  தாத்தாவுடனான உறவு பற்றிய காட்சிகள் போன்றவை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிக்காட்ட இயக்குநர் குறைவான வசனங்களை பயன்படுத்தியிருப்பது ஒரு பெரிய பலம். தாத்தா சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் விவரங்களையும் கொடியின் முக்கியத்துவத்தையும் விவரிக்கும் விதம், தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இப்படத்தின் குறைகள் என்றால் இசையும் காட்சியமைப்பும் இன்னும்கூட சிறப்பாக இருந்திருக்கலாம். படம் பேச எடுத்துக் கொண்ட களம் சிறப்பானது என்றாலும், அதனை ஒரு சினிமாவாக மாற்றும்போது நாடகத்தனமாகவே உருவாக்கி இருக்கிறார்கள். சில காட்சிகள் நீட்டிக்கப்பட்டதாகவும் சலிப்பூட்டுவதாகவும் உள்ளன. பல இடங்களில் படத்தின் மிக மெதுவான வேகம் தொய்வை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் சொல்ல வந்த கதையைப்போல, சொன்ன விதத்திலும் அழுத்தம் இருந்திருந்தால் படம் இன்னும் அழகாக ஈர்த்திருக்கும்.