உலகம் முழுக்க எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி இருக்கிறது எஸ்.எஸ்.ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகிவரும் SSMB29. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு சிறிய பரிசாக படத்திலிருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. Globetrotter என படத்திற்கு கொடுக்கப்பட்ட ஹேஷ்டேக், இப்போது இந்தப் பாடலின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
எம்.எம். கீரவாணி இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் மற்றும் காலபைரவா பாடியுள்ளனர். இந்தப் பாடலை பாடியுள்ளது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி குறிப்பை எழுதியுள்ளார் ஸ்ருதி “எம்.எம். கீரவாணி சாரின் இசையில் பாடுவது மகிழ்ச்சியாக இருந்தது. என்ன ஒரு சக்திவாய்ந்த பாடல்... குளோப்ட்ரோட்டர் ஒலிக்கட்டும்! உங்கள் கருணைக்கும், அன்றைய முழு குழுவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி ஐயா” எனப் பதிவிட்டுள்ளார்.
இப்பாடலின் வரிகள் மொத்தமும் ஒரு பயணியை குறிப்பதாகவே எழுதப்பட்டிருப்பதால், இது ஒரு அட்வென்ச்சர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மகேஷ்பாபுவுடன், கும்பரா என்ற பாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். அவரின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ப்ரியங்கா சோப்ராவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நவம்பர் 15 தேதி பிரம்மாண்டமாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இதற்கென பிரத்யேகமாக 100 அடியில் LED திரையை நிர்மாணித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு `வாரணாசி' எனப் பெயரிட இருப்பதாக சொல்லப்படுகிறது.