தீபிகா படுகோனே வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தான் பாதுகாப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள பீல் மாண்டே என்ற 33 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் உச்சிப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதால், உயரத்தில் சென்று தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ பரவுவதை தடுக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அத்துடன் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 26வது தளத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் வீடு உள்ளது. இந்தத் தகவல் அறிந்ததும், அவரது ரசிகர்கள் பதறிப்போய் சமூக வலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்தனர். அத்துடன் அவருக்காக வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக தீபிகா படுகோனே தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரைக்கொடுத்து தீயை அணைக்கு தீயணைப்பு வீரர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை 90க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.