தனது பங்களாவில் இருந்த மரத்தை வெட்டியதாக பிரபல இந்தி நடிகர் மீது மும்பை மாநகராட்சி வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர். வயது 64. சினிமா குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் ரன்பீர் கபூர் இளம் ஹீரோவாக இப்போது நடித்துவருகிறார். இவர்களது பங்களா, பாலி ஹில் பகுதியில் இருக்கிறது. இங்குள்ள கட்டடத்தை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட திட்டமிட்டுள்ளார் கபூர். இந்த வேலையை கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். பங்களாவின் ஓரத்தில் மரம் ஒன்று இருக்கிறது. இதை வெட்ட வேண்டும் என்று என்றால் மும்பை மாநகராட்சியில் அனுமதி வாங்க வேண்டும். கபூர் அனுமதி கேட்டபோது, குறிப்பிட்ட அளவுக்கு கிளைகளை வெட்டிக்கொள்ள அனுமதிக் கொடுத்தது மாநகராட்சி. ஆனால், அதற்கு அதிகமாக கிளைகளை வெட்டிவிட்டார்களாம்.
இதையடுத்து கர் போலீஸில் ரிஷி கபூர் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ரிஷி கபூர் கூறும்போது, ‘மாநகராட்சி குறிப்பிட்டபடி மரங்களை வெட்டியிருக்கிறேன். அக்கம் பக்கத்து வீட்டாரின் பொறாமையால் இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.