சினிமா

கொரோனா விதிமீறல்: நடிகர் மம்மூட்டி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த கேரள போலீஸ்

கொரோனா விதிமீறல்: நடிகர் மம்மூட்டி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த கேரள போலீஸ்

நிவேதா ஜெகராஜா

கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக மலையாள நடிகர் மம்மூட்டி, இயக்குநர் ரமேஷ் பிஷாரிடி மீது கோழிக்கோடு போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் மம்மூட்டி கடந்த 3-ம் தேதி கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். மூட்டு அறுவை சிகிச்சைக்கு உதவும் ரோபோக்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வில் அவர் கலந்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு, மருத்துவமனையில் இருந்து மம்மூட்டி வெளியேறியபோது அவரைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது அந்த இடம்.

கொரோனா விதிமுறைப்படி நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியதுடன், தனிமனித இடைவெளி பராமரிக்காமல், மாஸ்க் அணியாமல் பலரும் இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாக, கோழிக்கோடு எலத்தூர் காவல் நிலையம், நடிகர் மம்மூட்டி மற்றும் இயக்குநர் ரமேஷ் பிஷாரடி, மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்தது. இந்த எஃப்.ஐ.ஆரில் மம்மூட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப்பின் பெயரையும் காவல்துறை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரள தொற்றுநோய் நோய் சட்டம் 2021, பிரிவு 4, 5 மற்றும் 6 ன் கீழ் வழக்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். கேரள சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் தொற்றுநோய் மசோதா 2021-ஐ நிறைவேற்றியது. அதன்படி, தொற்று நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்தச் சட்டம்.

வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம் நினைக்கும் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள் அல்லது பிற செயல்பாடுகளை தடை செய்வதும் இந்தச் சட்டத்தில் அடங்கும். அந்தந்த மாவட்டங்களில் நோய் பரவுவதை அனுமதிக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் தேவையற்ற கூட்டங்கள் கூடும்போது, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்தச் சட்டம். இந்த நிலையில்தான் நடிகர் மம்மூட்டி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.