முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, ஏவிஎம் ஸ்டூடியோ. இதன் தயாரிப்பாளராக இருந்தவர் ஏவிஎம் சரவணன். இவர், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. 3-12-1939இல் பிறந்த அவர், தன்னுடைய 18ஆவது வயதில் ஏவிஎம் ஸ்டூடியோவிற்குள் காலடி எடுத்து வைத்தார். ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது என அனைத்துத் துறைகளிலும் அவர் பணியாற்றினார்.
1958ஆம் ஆண்டு, ‘மாமியார் மெச்சிய மருமகள்’திரைப்படம் மூலம் ஆரம்பித்த அவரது திரைப்பயணம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும், 100க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்க துணை நின்றார். குறிப்பாக, ‘முரட்டுக்காளை’, ’சகலகலா வல்லவன்’, ‘முந்தானை முடிச்சு’, ’புதுமைப் பெண்’, ’மிஸ்டர் பாரத்’, ’சம்சாரம் அது மின்சாரம்’, ‘மனிதன்’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘மாநகர காவல்’, ‘எஜமான்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரிக்க துணை நின்றார்.
இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, ராஜா சாண்டோ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். ’முயற்சி திருவினையாக்கும்’, ‘மனதில் நிற்கும் மனிதர்கள்’ (4 பாகங்கள்), ‘ஏவிஎம் 60 சினிமா’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் தொடர் ஒன்றை எழுதினார். எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமில்லாமல் செயல்பட்டு வந்த அவர், தீவிர சாய் பாபா பக்தர் ஆவார்.
தவிர, எல்லா இடங்களிலும் கைகளைக் கட்டிக்கொண்டு மிகவும் அடக்கமாக இருந்த அவர், அந்தப் பழக்கத்தை பள்ளிக் காலத்திலிருந்தே பின்பற்றி வந்ததாகவும், எப்போதுமே கெட்ட வார்த்தைகளைப் பேசியதில்லை எனவும் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அப்படியே கோபம் வந்தாலும், ‘மடச் சாம்பிராணி’ எனச் சொல்லி மட்டும் திட்டியதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று அவர் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், இன்று வயது மூப்பின் காரணமாக காலமாகியுள்ளார். அவரது இறப்பு, திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியாவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்குப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.