சினிமா

கவுரி லங்கேஷ் கொலையை படமாக எடுப்பதா? இயக்குனருக்கு நோட்டீஸ்!

webteam

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை படமாக எடுக்கக் கூடாது என்று இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷூக்கு கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கர்நாடக பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த மாதம் 5-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்நிலையில் சினிமா இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், கவுரி லங்கேஷ் கொலையை சினிமாவாக எடுக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இவர், ஏற்கனவே தமிழில் குப்பி, வனயுத்தம், காவலர் குடியிருப்பு, ஒரு மெல்லிய கோடு படங்களை இயக்கியிருக்கிறார். 
இந்நிலையில், ஏ.எம்.ஆர். ரமேஷூக்கும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும், கவுரி லங்கேசின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கவுரி லங்கேஷின் கொலை சம்பவத்தை மையமாக வைத்து சினிமா எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி கவுரி லங்கேஷின் தம்பி, இந்திரஜித் கூறும்போது, ‘இன்னும் கொலையாளிகள் பிடிபடவில்லை. அதற்குள் படமாக எடுத்தால் அது வழக்கைத் திசைதிருப்புவது போலாகிவிடும்’ என்றார்.
ஏ.எம்.ஆர். ரமேஷ் கூறும்போது, ‘கவுரி லங்கேசை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். அவரை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. எனக்கு இதுவரை நோட்டீஸ் எதுவும் வரவில்லை. வந்தால் சட்டரீதியாகச் சந்திப்பேன்’ என்றார்.