சினிமா

”ஆயிரத்தில் ஒருவன்” பட சிக்கலும்.. செல்வராகவன் எனும் கலைஞனின் ஆன்மாவில் விழுந்த அடியும்!

rajakannan

சினிமா என்பது மக்கள் மத்தியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நவீன கலை வடிவங்களில் முதன்மையானதாக திகழ்கிறது. நம்முடைய அக உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக அது இருந்து வருகிறது. அந்தகைய கலையை சிறப்பாக கையாண்டவர்கள் சொற்பமானவர்களே. அப்படியான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குநர் செல்வராகவன். 

இயக்குநர் செல்வராகவன் குறித்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது என்றால் சமீப காலத்தில் அது செல்வராகவனுக்கு தான். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏன் இயக்குநர் செல்வராகவன் இன்றளவும் கொண்டாடப்படுகிறார்? அவரது படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? அப்படி என்ன அவர் வித்தியாசமாக செய்துவிட்டார்? என்பன குறித்து இங்கு பார்க்கலாம். 

செல்வராகவனும் அரசியல் பார்வையும்!

'மயக்கம் என்ன' படத்திற்கு பிறகு செல்வராகவனின் இயக்கத்தில் ஏதோ ஒரு மாற்றம் இருந்து வருகிறது. ரசிகர்களுடன் ஒரு பாண்டை ஏற்படுத்துவதில் அவர் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. இத்தனைக்கு என்.ஜி.கே படத்தில் யாரும் பெரிதாக பேசாத இரண்டு முக்கியமான விஷயங்களை பேசியிருப்பார். அதாவது இயற்கை விவசாயம் குறித்தும் அதற்கு உள்ள நெருக்கடி குறித்தும் தொடக்கத்தில் லேசாக பேசியிருப்பார்கள். அதேபோல், இன்று நாம் பிரசாந்த் கிஷோரைப் பற்றி அதிகம் பேசுகிறோம். அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுக்க பின்புலத்தில் இவ்வளவு பெரிய டீம் வேலை செய்கிறது என்பதை விரிவாக என்.ஜி.கேவில் பேசியிருப்பார். ஆனாலும் ஏதோ ஒரு செயற்கை தன்னை ஆடியன்ஸ் உடன் படத்தை ஒன்ற விடவில்லை. இந்தப் படம் வெற்றிப் பெற்றிருந்தால் நிச்சயம் பெரிய அளவில் அதன் கருப்பொருள் பேசப்பட்டிருக்கும். 

புதுப்பேட்டை ஒரு கேங்ஸ்டர் படம் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அது முழுக்க முழுக்க ஒரு அரசியல் திரைப்படம். மிக நேரடியாக அரசியலை பேசிய படம். கதை கொக்கிக் குமாரில் ஆரம்பித்து இருந்தாலும் அதன் பாதை ஆளும், எதிர் கட்சிகளின் அரசியல் கைப்பாவையாக இருந்து பின்னர் எப்படி அரசியலுக்கு கொக்கி குமார் போன்றவர்கள் நுழைகிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக பேசியிருப்பார் செல்வராகவன். நேரடியாகவே தமிழகத்தின் பிரதான கட்சிகள் அதாவது தமிழ் மொழியில் புலமையுடன் பேசி அரசியல் செய்யும் கட்சிகளின் தலைவர்களின் பேக்கிரண்ட் வாழ்க்கையை பேசுகிறது புதுப்பேட்டை படம். 

இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசுவதாக பல படங்களை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், காதல் கொண்டேன் படத்தில் வரும் ஒரு காட்சி எவ்வளவு அழுத்தமாக இடஒதுக்கீடு குறித்து பேசியிருக்கும். தனுஷ் முதன் முதலாக கல்லூரிக்குள் செல்லும் அந்த காட்சியை அவ்வளவு உணர்வுபூர்வமாக எடுத்திருப்பார் செல்வராகவன். ”கடவுளே இந்த மாதிரி எங்கிருந்துதான் வந்திராங்களோ ஏதாவது ஒரு கோட்டவுல உள்ள நுழஞ்சிடுறாங்க.. இவனுங்க கூடலாம் தாளி அறுக்கனும்னு என் தலையில் இருக்கு” என்று மிக காட்டமாக வசனம் வைத்திருப்பார். அந்தக்காட்சியில் எத்தனையோ ஏழை, கிராமத்து மாணவர்கள் சென்னைப் போன்ற பெரு நகரங்களை சந்தித்த சொல்ல முடியாதா வேதனையை காட்சிப்படுத்தி இருப்பார்.

கணக்குப்பாடம் எடுக்கும் காட்சியிலும் வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்த தனுஷை எழுப்பிவிட்டு, “உங்களுக்கு யாராவது ப்ரீயா சீட் கொடுத்திடுவாங்க, ப்ரீயா சாப்பாடு போட்ருவாங்க, எங்கையாவது தின்னுட்டு இங்க வந்து தூங்குவீங்களா?” என அந்த புரபஷர் சொல்லும் வார்த்தை மிகவும் வலிமையான ஒன்று. அந்த வினோத்தை மிகப்பெரிய அறிவாளியாகத்தான் செல்வா காட்சிப்படுத்தி இருப்பார். பின் பாதியில் கதை தடம் புரண்டது வேறு கதை. 

வலிமையான பெண் கதாபாத்திரங்கள்!

செல்வராகவன் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவாக இருக்கும். காதல் கொண்டேனில் திவ்யா ஆக இருக்கட்டும், 7ஜி ரயின்போ காலனியில் திவ்யா ஆகட்டும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமான் சென், ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் ஆகட்டும், மயக்கம் என்ன யாமினி ஆகட்டும், என்.ஜி.கே படத்தில் ராகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரம் ஆகட்டும் எல்லாமே போல்ட் ஆனவை. மயக்கம் என்ன யாமினி கதாபாத்திரம் பலருக்கும் ஃபேவரெட். இவருடைய பெண் கதாபாத்திரங்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள், முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள், தன்னுடைய வாழ்க்கையை தானே முடிவு செய்து கொள்ளும் தன்மையுடன் இருக்கிறார்கள். ஆனாலும், மயக்கம் என்ன படத்தில் அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள என்ற பாடல் வைத்தது பலருக்கும் அதிருப்தியே. நிச்சயம் செல்வா இதனை தவிர்த்து இருக்க வேண்டும். 

ஏழை, நடுத்தர வர்க்க கதாநாயகர்கள்

செல்வராகவன் படங்களின் கதாநாயகர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், லோயர் மிடில் கிளாஸ் பின்புலத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களது படங்களிலேயே இந்த கதாபாத்திரங்களை வித்தியாசப்படுத்த அப்பர் மிடில் க்ளாஸ் மற்றும் பணக்கார வர்க்க பின்புலத்தை சேர்ந்தவர்களால் அவரது ஹிரோக்கள் ஏலனமாக பார்க்கப்படுவதை காணலாம், காதல் கொண்டேன் வினோத், 7ஜி கதிர், புதுப்பேட்டை கொக்கி குமார், ஆயிரத்தில் ஒருவன் முத்து, மயக்கம் என்ன கார்த்திக் சுவாமிநாதன் எல்லோருக்கும் ஏதோ ஒரு பொதுப்பண்பு இருக்கவே செய்கிறது. இத்தகைய கதாபாத்திரங்களே செல்வாவின் பலமாக இருந்தது. ஆனால், நானே வருவேன், நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே படங்களில் அது மிஸ்ஸிங். 

ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த அடி!

செல்வராகவன் மிகுந்த மெனக்கெடல்களுடன் உருவாக்கிய படைப்புதான் ஆயிரத்தில் ஒருவன். 3 வருட கடின உழைப்பை கொட்டி அவர் உருவாக்கிய காவியம் தான் ஆயிரத்தில் ஒருவன். அப்படி ஒரு படத்தை இனி அவராலேயே எடுக்க முடியுமா என்பதே சந்தேகம். ஒரு உச்ச மனநிலையில் அருவியாக கொட்டிய ஒரு கலைப்படைப்புதான் அது. அவ்வளவு ஆராய்ச்சி பின்புலம் அந்த படத்தில் இருக்கும். மூன்று வருட உழைப்புக்கு பின் வெளியான இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை. தொடக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து வெளிவந்த தகவல்கள் எப்படி இருந்தது என்றால் படம் தோல்வியும் இல்லை வெற்றியும் இல்லை தயாரிப்பாளருக்கு இல்லை என்பதுதான். இதனை அந்தப் படத்தின் தயாரிப்பாளரே 10 வருடங்களுக்கு பிறகு ரிரிலீஸ் செய்யும் போது சொல்லி இருந்தார். ஆனால், செல்வராகவன் தன்னுடைய பேட்டி ஒன்றி கூறிய விஷயங்கள் நம்முடைய கண்களை கலங்கை வைத்துவிடுகிறது. 

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நிறைய செலவு ஆகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்க முடியாத சூழலுக்கு செல்வா தள்ளப்படுகிறார். பின்னர் தன் தரப்பில் இருந்து பெரும் தொகையை திரட்டித்தான் படத்தை முடிக்கிறார். அது கிட்டத்தட்ட 30-40 சதவீதம் இருக்கும் என்று அவரே கூறுகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஆன கடனை அடைக்க பல வருடங்கள் ஆனதாக மிகவும் வேதனையுடன் அவர் தன்னுடைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு வெளியான படங்களில் செல்வாவின் டச் குறைய துவங்கியது என்பதோடு ஒப்பிட்டு இதனை பார்க்க வேண்டும். மயக்கம் என்ன படம் அவருடைய டச்சில் வந்த திரைப்படம். அதன் பிறகு அவருடைய பாணியில் அவரால் படங்களை கொடுக்க முடியவில்லை. அதாவது, மிகப்பெரிய கடன் சுமை செல்வராகவன் என்று கலைஞனை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. அந்த பாதிப்பு அவரது கலை வாழ்க்கையை நிச்சயம் பாதித்து இருக்க வேண்டு. 

ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த சோழர்கள் பற்றிய உணர்வை நிச்சயம் பொன்னியின் செல்வனால் கொடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. படமாக பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக இருக்கலாம், ஆனால் உணர்வுபூர்வமாக சோழன் துன்பப்படும் போது நம்மையும் அதற்காக வருத்தப்பட வைத்ததுதான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றி. அத்தகைய படைப்பை கொடுத்த செல்வராகவனை தமிழ் சினிமா ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.