ki‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் பேசும் வனங்கள் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், சரத்குமார் எனப் பலரும் நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவை தேவியாகவும் தோன்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தப் படத்தின் தமிழ் டீசர், கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. தெலுங்கு பதிப்பை மகேஷ் பாபுவும், இந்தி பதிப்பை அமிதாப் பச்சனும், மலையாளப் பதிப்பை மோகன்லாலும், கன்னட பதிப்பை ரக்ஷித் ஷெட்டியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
இதற்கிடையில் இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், டீசர் வெளியீட்டு விழாவில் உடல்நலக்குறைவால் கலந்துகொள்ளவில்லை. எனினும் அதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டன. படத்தில் குறைவான பகுதியே தனக்கு ஒதுக்கப்பட்டதால் மணிரத்னத்தின் மீது விக்ரம் கோபத்தில் இருப்பதாகவும், அதனால்தான் கலந்துகொள்ளவில்லை என்றும் செய்திகள் உலா வந்தன.
மேலும் தான் சோலாவாக நடித்த ‘கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘பொன்னியின் செல்வன்’ டீசர் விழா நடைபெற்ற அடுத்த இரண்டு நாட்களிலேயே விக்ரம் கலந்துகொண்டதும் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில், நேற்று ‘பொன்னியின் செல்வன்’ பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் போஸ்டருடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதில் டீசர் விழாவில் பட்டத்து இளவரசரை தவறவிட்டீர்களா? என்று கேட்டு, அதற்காக நாளை சிறப்பான ஒன்று காத்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ டீசரில் விக்ரம் பேசும் வசனங்களை வெறித்தனமாக டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவை படக்குழு, நமது சோழப் புலி 5 மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி) உறுமுகிறது என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது. இது ஒருபக்கம் விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தாலும், பெரிதாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: போர்க்களத்திற்கு நடுவே பூத்து குலுங்கிய காதல்கள்! பொன்னியின் செல்வனில் காவிய காதல் யாருடையது?