தேவா தேவா
சினிமா

தேவாவின் இழப்பு தாங்கமுடியாத வருத்தம்..! திரைப் பிரபலங்கள் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா இழப்பு தாங்க முடியாத வருத்தம் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

Rishan Vengai

தமிழ் சினிமாவின் தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் காலமானார். 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த அவர், ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் வெற்றிப் பாடல்களுக்கு முக்கிய பங்களிப்பு செய்தவர். திரைப் பிரபலங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 76. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியிருக்கும் தேவா, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்

ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கிய அவர், விஜய், அஜித் ஆகியோரின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கியத் தூணாக விளங்கியவர்.

music director deva

திரைப்பட டைட்டில் கார்டில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ பெயர் தாங்கி வரும் BGM-ஐ இசையமைத்தவர் தேவாதான். இன்றுவரை அந்த BGM–க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கானா பாடல்களுக்கு இணையாக மெல்லிசை பாடல்களுக்கும் புகழ்பெற்றவர் தேவா.

1990இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதை பெற்ற அவர், 1992 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். அதேபோல 1995 இல் ஆசை திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில திரைப்பட விருதை பெற்றுத்தந்தது.

இந்தசூழலில் தேவா மறைவிற்கு பல திரைப்பிரபலங்கள் இரங்க்ல தெரிவித்துவருகின்றனர்.

குஷ்பூ

தேவாவின் இசையில் பல ஹிட் பாடல்களில் இடம்பெற்றவர் குஷ்பூ. தேவாவின் மறைவுக்கு வேதனையான பதிவொன்றை பதிவிட்டிருக்கும் அவர், “முற்றிலும் நொறுங்கிப் போனேன். நம்பவே முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பு வரை ஆரோக்கியமாகவும், சிரித்த முகத்துடனும், ஆசீர்வாதங்களுடனும், நம்முடன் ஒரு அங்கமாகவும் இருந்த ஒரு மனிதர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இது நெஞ்சை நொறுக்குகிறது. தேனிசை தென்றல் என்று அழைக்கப்பட்ட அவர், உண்மையிலேயே தேனைப் போல இனிமையானவராகவும், காற்றைப் போல இலகுவான மனதுடையவராகவும் இருந்தார். இசை மற்றும் சினிமா உலகிற்கு அவரது பங்களிப்பு அளவிட முடியாதது. மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். ஏன்?? தேவா சார், உங்கள் இழப்பு உணரப்படும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

சத்யராஜ்

தேவாவின் இறப்பு செய்தி கேட்டு உடனடியாக அவருடைய இல்லத்திற்கு சென்ற சத்யராஜ், பல திரைப்படங்களில் தேவாவுடன் வேலை செய்திருக்கிறேன். தகடு தகடு என எனக்காக ஒரு ட்ரெண்ட் சாங்கை போட்டவர் தேவா. அவர் மிகவும் நல்ல மனிதர், அவருடைய இழப்பு தாங்க முடியாத வருத்தத்தை தருகிறது என பேசினார்.

வைரமுத்து

எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருக்கும் வைரமுத்து, “சாவாப் பாடல்கள் தந்த

தேவா மறைந்துவிட்டார்

தேனிசைத் தென்றல்

நின்று போயிற்றா?

நெஞ்சு கனக்கிறது

தன் பேச்சு மூச்சு

அனைத்திலும்

இசையாகவே இருந்தவர்

சங்கீதத்தோடு

இங்கிதம் தெரிந்தவர்

பண்ணிசைக்கத் தெரிந்த

பண்பாளர்

அவரோடு நான் பணியாற்றிய

அண்ணாமலை, பாட்ஷா

அருணாசலம், வாலி, குஷி,

நேருக்கு நேர், ஆசை,

பஞ்ச தந்திரம் முதலிய

நூற்றக்கணக்கான படங்களின்

பாட்டு வெற்றிக்கு

தேவாவே காரணம்

தேவாவின் இசையைப்போல்

ரஜினிக்கு வேறு யாரும்

பொருந்தவில்லை என்றுதான்

ரசிகர்கள் பேசுவார்கள்

என்ன சொல்வது?

எனக்கு என் விரல்களில்

ஒன்று போய்விட்டது

அவரை இழந்துவாடும்

குடும்பத்தார்க்கும்

ரசிகர்களுக்கும்

என் ஆழ்ந்த இரங்கல்

கவலைப்படாதே சகோதரா

என்று பாடியவனே!

இன்றுநான் கவலைப்படாமல்

என்ன செய்ய?" என பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகின் இசை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவா சார் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இசையும், பாடல்களும் என்றும் நம் நினைவுகளில் வாழும். ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

நிவின் பாலி

தேவா சார், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்... உங்கள் இசை தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும் என பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ்

உங்களின் காலத்தால் அழியாத மெல்லிசையும், மறக்க முடியாத பாடல்களும் எங்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். உங்களின் அபாரமான திறமையால் தமிழ் இசையை வளப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும், மாபெரும் கலைஞரே.

ஆர்ஜே பாலாஜி

தமிழ் சினிமாவின் உண்மையான ஜாம்பவானும், தலைமுறை தலைமுறையாகத் தன் இசையால் ஈர்க்கப்பட்டவருமான தேவா சார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது . 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் அவருடன் பணியாற்றும் பாக்கியம் பெற்றிருந்தது, என்றும் ஒரு பொக்கிஷமான நினைவாக நிலைத்திருக்கும். அவரது காலத்தால் அழியாத இசையின் மூலம் அவரது மரபு என்றும் நிலைத்திருக்கும். ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

சிம்ரன்

இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மனம் நொறுங்கிப் போனேன். தேனிசை தென்றல் தேவா ஐயாவின் மெல்லிசைகள் பல தசாப்தங்களாக எங்கள் வாழ்விலும் நினைவுகளிலும் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளன. அவரது இசைக்கு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு தனி இடம் உண்டு, மேலும் அவரது காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் அவரது மரபு தொடர்ந்து வாழும் என பதிவிட்டுள்ளார்.