மணிரத்னத்தின் தக் லைஃப் திரைப்படம் நேற்றைய தினம் வெளியான நிலையில், படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் குறித்த தகவல் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, பலரின் மனம் கவர்ந்த நடிகர்களின் வாரிசுகள் மற்றும் நடிகை உள்ளிட்டோர் உதவி இயக்குநர்களாக அசத்தியுள்ளனர்.
மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், நேற்றைய தினம் வெளியானது. நாயகன் பட கூட்டணி மீண்டும் ஒருங்கிணைந்து படம் எடுத்திருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக, ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் இணையத்தில் அதிக அளவில் ட்ரெண்டானது. அதிலும், ஆடியோ லான்ச்சில் சின்மயி பாடிய வீடியோ இன்றளவும் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இப்படியாக, மிகுந்த எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது தக் லைஃப். எனினும், கமல் மற்றும் சிம்புவின் நடிப்பை பலரும் சிலாகித்து வருகின்றனர்.
அதே நேரம், மணிரத்னத்திடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.. என்று கூறும் ஒரு தரப்பு, பொன்னியின் செல்வன் மேடையில் நடிகர் ஜெயராம் சொன்ன ‘ஏய் மணி’ என்ற ஃபோட்டோவை வைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே, படத்தில் பல முக்கிய முகங்கள் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய நிலையில், அவர்கள் குறித்த தகவல் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
ஆம், மணிரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய தனது மகள் அனந்திகா சுந்தர் குறித்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவை போட்டிருக்கிறார் நடிகை குஷ்பு. தியேட்டரில் எடுத்த ஃபோட்டோவை பகிர்ந்து கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் படத்தில் மகள் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பது பெருமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் லப்பர் பந்து நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் தக் லைஃபில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து பலரின் மனங்களை கவர்ந்திருந்தார் சஞ்சனா. இந்த நிலையில்தான், தக் லைஃபில் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அதேபோல், நடிகர் ரஹ்மானின் மகள் அலீஷா ரஹ்மானும் தக் லைஃபில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். புதுப் புது அர்த்தங்கள் படத்தின் மூலம் பலருக்கும் பரீட்சயமான முகமாக மாறிய நடிகர் ரஹ்மான், இன்றளவும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வனிலும் நடித்திருந்தார் ரஹ்மான். இப்படியாக இளம் ரத்தங்கள் தக் லைஃபில் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இருப்பதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.