சீர் மரபினர் சமுதாயத்தைப் பற்றி தவறாக சித்தரித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சீர்மரபினர் சங்க ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் இன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தமது மனுவில், “கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சீர்மரபினர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யாமல் படம் எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை தவறாக சித்தரித்துள்ளார் இயக்குநர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பவாரியா சமுதாயத்தினர் தான். அதேபோல், தமிழகத்தில் உள்ள வேட்டைக்காரன் சமுதாயமும் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குற்றப்பரம்பரை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. படத்தில் குற்றம்பரம்பரை தொடர்பான புத்தகத்தை கார்த்திக் படிப்பது போல் காட்சிகள் உள்ளது. சீர்மரபினரை தவறாக சித்தரித்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும். அதுவரை படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 50 சதவீதத்தை சீரமரபினர் சமூக மேம்பாட்டிற்காக செலவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், “6 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தினை பார்த்து உறுதி செய்யாமல் எந்த உத்தரவையும் பிறபிக்க முடியாது. மேலும், படத்தை ஆய்வு செய்ய இரண்டு வழக்கறிஞர்கள் கொண்ட குழு நியமிக்கப்படும். அவர்கள் திரைப்படத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கான செலவுகளை மனுதாரர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். மனு மீதான விசாரணை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.