சினிமா

’மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடியுங்கள்’ - சித்ராவின் தந்தை போலீசில் புகார்

’மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடியுங்கள்’ - சித்ராவின் தந்தை போலீசில் புகார்

webteam

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் மற்றும் உறவினர்கள் நசரேத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவான்மியூரை சேர்ந்த சின்னத்திரை நடிகை சித்ரா.(29). தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்காக சித்ரா சென்னை அருகேயுள்ள நசரேத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். இதையடுத்து தூக்கிட்ட நிலையில் சித்ராவின் உடல் தனியார் விடுதி அறையிலிருந்து இன்று மீட்கப்பட்டது. சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்ததால் போலீசார் பல கோணங்களில் சித்ராவின் மரணத்தை விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக சித்ராவின் அறையில் தங்கி இருந்த ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விசாரணையில் சித்ராவுக்கும், தனக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துவிட்டதாகவும், சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் ஹேம்நாத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் முறையான ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே திருமணம் தொடர்பான தகவலை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹேம்நாத் வெளியே சென்றிருந்ததாகவும் திரும்பி வந்து பார்க்கும்போது கதவு நீண்ட நேரம் திறக்காததால் ஊழியர்களிடம் மாற்று சாவி வாங்கி கதவை திறந்து பார்த்தபோது சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் மற்றும் உறவினர்கள் நசரேத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என போலீசில் வலியுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஓட்டல் ஊழியர் கணேசன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்தான் மாற்று சாவியை எடுத்துச் சென்று ஹேம்நாத்திடம் கொடுத்துள்ளார். அடுத்தகட்டமாக ஓட்டலின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.