சினிமா

‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள்

‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள்

webteam

நடிகர் சிம்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது ரசிகர்கள் சிம்புவின் பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றி அபிஷேகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் பொங்கல் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மேலும், “வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் அன்று பால் அபிஷேகம், பெரிய கட் அவுட், பேனர் எல்லாம் வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, சகோதர சகோதரிகளுக்கு முடிந்ததை செய்யுங்கள்” என தெரிவித்திருந்தார்.

இதைப்பார்த்த சில வலைதளவாசிகள் சிம்புவிற்கு ரசிகர்களே இல்லாதபோது எதற்கு இந்த வீடியோ என கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிம்பு, மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “இதுவரை இல்லாத அளவிற்கு கட் அவுட், பேனர் வையுங்கள். பாக்கெட்டில் வேண்டாம் அண்டா, அண்டாவாக பால் ஊற்றுங்கள். எனக்கு தான் ரசிகர்களே இல்லையே, ஒன்று இரண்டு பேர் தானே இருக்கிறீர்கள் அதனால் நீங்கள் செய்யுங்கள். தப்பு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பால் முகவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் சிம்பு மீது புகார் தெரிவித்தது.

இந்நிலையில், திருச்சியில் சிம்புவின் ரசிகர்கள் அவரது பேனருக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், “திருச்சி ரசிகர்களின் அண்டாவில் பால் ஆரம்பம். இது சும்மாதான். பிப்ரவரி ஒன்று தான் பார்க்க போரிங்க சிம்பு ரசிகர் ஆட்டத்தை” என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது.