சினிமா

இலவச டீ, பஸ் - ஆட்டோ பயணம் ஃப்ரீ... ரஜினி பிறந்தநாளில் ரசிகர்கள் சிறப்பு ஏற்பாடு!

kaleelrahman

மக்களுக்கு இலவச டீ, பேருந்து - ஆட்டோ பயணம் என நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை, அவரது தீவிர ரசிகர்கள் வகை வகையான வழிகளில் கொண்டாடி வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். டீக்கடை நடத்திவரும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக உள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி, கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வந்துள்ளார்.


இந்நிலையில், இன்று ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளையொட்டி, அவரது அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதையும் சேர்த்து கொண்டாடும் வகையில், ரஜினிகாந்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தனது டீக்கடையில் இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக டீ வழங்கி வருகிறார்.


இது குறித்து நாகராஜனிடம் கேட்டபோது, "தலைவரின் பிறந்த நாளையொட்டி என் கடையில் டீ இலவசமாக வழங்குகிறேன். என் பொருளாதார நிலையில், இது மட்டும்தான் முடிந்தது. ரஜினி அரசியல் பணி துவங்கிய பிறகு, அவரை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான வழிகளில் என்னால் இயன்ற அளவுக்கு இது போன்ற செயல்களை செய்வேன்" என்றார்.


அதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ரஜினி பிறந்தநாள் விழா கொண்டாட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆற்காட்டிலிருந்து கலவை வரை செல்லக்கூடிய தனியார் பேருந்துக்கும், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கூடிய ஆட்டோக்களுக்கு மொத்தமாக கட்டணத்தை செலுத்தி, பொதுமக்களுக்கு இலவசாக சேவையாக வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி துவக்கி வைத்தார்.


அதைத்தொடர்ந்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை செய்த சோளிங்கர் ரஜினி மக்கள் மன்றத்தினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.