`பாகுபலி' என்ற மாபெரும் ஹிட் படத்தை தயாரித்த நிறுவனம் ஷோபு யார்லகட்டாவின் ஆர்கா மீடியா. அதன் பின்பு கடந்த ஏழு வருடங்களாக எந்த படமும் தயாரிக்காமல் இருந்த இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஃபஹத் பாசிலுடன் இரண்டு படங்களை அறிவித்தது. அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு இப்போது துவங்கியுள்ளது.
ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் உருவாகும் `Don’t Trouble The Trouble' என்ற இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அப்போதே படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தாமதங்களுக்குப் பிறகு இப்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் எஸ்.எஸ். கார்த்திகேயா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோருடன் இணைந்து ஆர்கா மீடியா,இப்படத்தைத் தயாரிக்கிறது . எஸ்.எஸ். ராஜமௌலி இந்தப் படத்தை வழங்குகிறார். கீரவாணியின் மகன் காலபைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஃபஹத் பாசிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார். மேலும், இதே நிறுவனம் `Oxygen' என்ற படத்தை ஃபஹத் பாசிலுடன் அறிவித்தது. ஆனால் அது குறித்து இப்போது எந்த தகவலும் இல்லை.