சினிமா

ஓடிடி திரைப் பார்வை: Cinema Bandi- சினிமா பின்புலத்தில் மன அழுத்தம் போக்கும் கலகல படைப்பு

subramani

சினிமா எனும் கனவுத் தொழிற்சாலை சார்ந்த உண்மைக்கதைகளின் நீர்த்துப் போன கற்பனையான காமெடி வடிவம் ஒன்றை உருவாக்கினால் அதன்பெயர் 'சினிமா பண்டி' (Cinema Bandi). நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் ஈர்க்கும் இந்த தெலுங்கு சினிமா குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.

துண்டிராஜ் கோவிந்த் பால்கே எனும் இயற்பெயர் கொண்டவர் தாதா சாகேப் பால்கே. இவரே இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படுகிறார். இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா”வை 1913ல் தயாரித்து இயக்கியவர் அவர். உள்ளூரில் இருக்கும் சிலரை நடிகர்களாக்கி ஆண்களையே பெண்வேடத்திலும் நடிக்க வைத்து இந்தியாவிற்கான முதல் முன்னோடி சினிமாவான 'ராஜா ஹரிச்சந்திரா'வை உருவாக்கினார் பால்கே. அவர் பெயரிலேயே பால்கே விருது வழங்கப்படுகிறது. தாதா சாகேப் பால்கே தனது முதல் திரைப்படத்தை உருவாக்க என்ன பாடுபட்டார்? அதற்காக எப்படியெல்லாம் உழைத்தார் என பால்கேவின் வாழ்க்கையினை பதிவு செய்த மராட்டிய மொழி திரைப்படம் 'ஹரிச்சந்திராச்சி பேக்டரி' (Harishchandrachi Factory). இப்படம் 2009-ஆம் ஆண்டு வெளியானது. இதனை 'மேக்கிங் ஆஃப் ராஜா ஹரிச்சந்திரா' என்று கூடச் சொல்லலாம்.

மலையாளத்தில் எடுக்கப்பட்ட முதல் சினிமாவாக அறியப்படுவது ஜே.சி.டேனியல் இயக்கிய 'விகதகுமாரன்'. அடிப்படையில் ஜேசி.டேனியல் ஒரு மருத்துவர். சினிமா மீது கொண்ட காதலினால் மலையாளத்தின் முதல் சினிமாவை எடுக்க முயல்கிறார். தன் சொத்துக்களை எல்லாம் விற்று பெரிய போராட்டத்திற்கு பிறகு கேமரா, பிலிம் சுருள்களை வாங்கி விகதகுமாரனை அவர் உருவாக்கினார். ஆனால் அந்த சினிமாவிற்கும் ஜே.சி.டேனியலுக்கும் நேர்ந்த கதி துயரமானது. ஜே.சி.டேனியலின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு 2003ஆம் ஆண்டு உருவான சினிமா ‘செல்லுலாயிடு’. அதில் விகதகுமாரனை இயக்குவதற்காக ஜே.சி.டேனியல் செலுத்திய உழைப்பு குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும். 'விகதகுமாரன்' எப்படி உருவாகி அழிந்துபோனான் என காட்டப்பட்டிருக்கும்.

மேலே சொன்னது போல இந்தியா முழுக்க தங்கள் மொழியில் முதல் சினிமாவை இயக்க தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் பலர். இவை எல்லாம் அடர்த்தியான உண்மைக் கதைகள்.

இந்த உண்மைக்கதைகளின் நீர்த்துப் போன கற்பனையான காமெடி வடிவம் ஒன்றை உருவாக்கினால் அதன்பெயர் 'சினிமா பண்டி' (Cinema Bandi). தற்போது இந்தப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. தெலுங்கு மொழித் திரைப்படமான இதன் கதை ரொம்பவே எளிமையானது. கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் போக்குவரத்திற்காக ஷேர் ஆட்டோ ஓட்டும் வீராவுக்கு ஒரு நவீன மாடல் கேமரா கிடைக்கிறது. தன் ஆட்டோவில் பயணம் செய்த யாரோ விட்டுச் சென்ற அந்த கேமராவைக் கொண்டு தன் கிராம மக்களை ஒருங்கிணைத்து ஒரு சினிமாவை இயக்க முயல்கிறார் வீரா. அந்த சினிமா எப்படி வந்தது. அதன் உருவாக்கத்தின் போது நடந்த கலகலப்பான விசயங்கள் என்ன என்பது தான் 'சினிமா பண்டி’யின் திரைக்கதை.

உள்ளூரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் வீராவின் நண்பனை உதவிக்கு வைத்துக் கொண்டு கிராம பெரியவர் ஒருவரின் கதையினை சினிமாவாக்க முயல்கிறது வீராவின் குழு. இதற்கான நடிகர்கள் உள்ளூரிலேயே கண்டறியப்படுகிறார்கள். நாயகன், நாயகி தேர்வு உள்ளிட்ட காட்சிகள் அனைத்தும் கலகலப்பாகச் செல்கிறது. இதற்கிடையில் கேமராவை தொலைத்த பெண் கேமராவைத் தேடி கிராமத்தை அடைகிறார். அவர் கிராமத்தை அடையும்போது துரதிஷ்டவசமாக அந்த கேமரா படப்பிடிப்பில் உடைந்து போயிருந்தது. பிறகு சில கலாட்டாக்களுக்கு பிறகு கேமராவின் ஓனர் பெண் தனது கேமராவை எடுத்துச் செல்கிறார். அதனை சோதித்தபோது வீராவும் கிராமவாசிகளும் சேர்ந்து தன் கேமரா கொண்டு ஒரு சினிமாவை உருவாக்க முயன்றது தெரியவருகிறது. அதனை முறையாக எடிட் செய்து கிராம வாசிகளுக்கு திரையிட்டுக் காட்டுகிறார் அப்பெண். ஏனோ தானோ என இம்மெச்சூராக படம்பிடிக்கப்பட்ட அந்த சினிமாவிற்கு 'டைட்டானிக்' என பெயரிடப்படுகிறது. அமெச்சூராக உருவான சினிமவாக இருந்தாலும், அதில் அக்கிராம வாசிகளின் ஆத்மார்த்தமான பங்களிப்பு இருந்தது.

பெரிய லாஜிக் எதுவும் இல்லாமல் கதை போன போக்கில் ஜாலியாக ஒரு சினிமாவை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் கண்ட்ரேகுலா (Praveen Kandregula). வீராவாக நடித்திருக்கும் விகாஷ் வசிஸ்தாவின் நடிப்பு எதார்த்தம். வீரா உள்ளூர்வாசிகளை வைத்து ஒரு சினிமாவை உருவாக்க முயன்றதற்கு பின்னால் சொல்லப்படும் காரணம் முக்கியமானது. தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாத தன் கிராமத்திற்கு தேவையான அனைத்தையும் ஒரு சினிமா எடுத்தால் செய்துவிடலாம் என நம்புகிறார் வீரா. சினிமாவில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும்; அந்த பணத்தைக் கொண்டு தன் ஊருக்கு பல நன்மைகளைச் செய்யமுடியும் என வெள்ளாந்தியாக நம்புகிறார் அவர். அதன் தொடர்ச்சியாகவே உள்ளூர் 'டைட்டானிக்' உருவாக்கப்படுகிறது.

'சினிமா பண்டி' எனும் இப்படத்தின் டைட்டில் கார்டில் ஒரு வரி சேர்க்கப்பட்டிருக்கும் 'Everyone is a film maker... at heart'. உண்மை தான் மனிதர்கள் யாரைக் கேட்டாலும் சொல்வதற்கு ஒரு கதை அவர்களிடம் இருக்கும். ‘இதை சினிமாவா எடுத்தால் நல்லா இருக்கும் பாஸ்’னு உங்களைச் சுற்றி எத்தனை நண்பர்கள் இதுவரை சொல்லி இருக்கிறார்கள் யோசித்துப் பாருங்கள்.

சினிமா நிகழ்த்தும் மேஜிக் அதுதான். அனைவராலும் ஒரு சினிமாவை உருவாக்கி விடமுடியும் என அது உங்களை நம்பவைக்கும். அதனால் தான் சினிமாவை ஜனரஞ்சகமான கலை என்கிறார்கள். எல்லோராலும் ஒரு சினிமாவை எடுத்துவிட முடியுமா என்றால் உண்மை கொஞ்சம் முரணானதுதான். மன அழுத்தம் நிறைந்த இந்த லாக்டவுன் காலத்தில் பாதுகாப்பாக வீட்டிற்குள் அமர்ந்து சினிமா பண்டி’யை கலகலப்பாக பார்த்து ரசிக்கலாம்.

- சத்யா சுப்ரமணி