சினிமா

எம்.ஜி.ஆர் எடுக்க இருந்த ’பொன்னியின் செல்வன்’ படத்துக்கு திரைக்கதை எழுதியது யார் தெரியுமா?

subramani

அமரர் கல்கி எழுத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று புனைவு கதையை படமாக எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் திலகம் என அனைவராலும் அறியப்படுகிற எம்.ஜி.ஆர். மிகத் தீவிரமாக செயல்பட்டார் என்பது ஊரறிந்த விஷயம்தான்.

எம்.ஜி.ஆர் தொட்டு, கமல்ஹாசன், ரஜினி என கோலிவுட்டின் பல உச்ச நட்சத்திரங்களின் அடங்கா கனவாக இருந்த ‘பொன்னியின் செல்வன்’ கதையை தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி அதன் முதல் பாகமும் வெளியாகிவிட்டது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு ஒருவழியாக இப்போது திரைவடிவம் கிடைத்திருந்தாலும் தொடக்கத்தில் அதனை படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சிகள் குறித்த பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அதன்படி பொன்னியின் செல்வன் - 1 பட விழாவின் போது கமலும் ரஜினியும் பேசியிருந்தது பலரது வரவேற்பையும் எதிர்ப்பார்ப்பையும் எகிர வைத்திருந்தது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் கதையை எம்.ஜி.ஆர் படமாக எடுக்க முனைந்த முயற்சி குறித்த தகவலும் ஃபேஸ்புக் பதிவு மூலம் தெரிய வந்திருக்கிறது.

Arrawinth Yuwaraj என்பவரின் பதிவுதான் தற்போது நெட்டிசன்கள் பலரது பார்வையையும் பெற்றிருக்கிறது. அதாவது, 1950ம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆர். காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு சென்றிருந்த போது விழா மேடையில் அவரை பாராட்டி பலரும் பாடி புகழ்ந்திருந்த போது ஒரு மாணவன் மட்டும் "தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் காதல்மொழி பேசி இன்னும் எத்தனை காலம்தான் மரத்தைச் சுற்றி டூயட் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மனிதர்களை எப்போது திரையில் காணப் போகிறோம்?" என்று பேச தொடங்கியிருக்கிறார்.

அந்த மாணவனின் பேச்சு அப்போது அரங்கையே அதிர வைத்திருந்த நிலையில் பலரும் அவரது பேச்சுக்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆரோ “அவர் பேசட்டும்” எனச் சொல்லி மற்ற மாணவர்களை நோக்கி அமருமாறு சைகை செய்திருக்கிறார். இதனையடுத்து இருந்த சுமார் 20 நிமிடங்களுக்கு அந்த மாணவன் பேசிய பேச்சு முழுவதும் “எதார்த்தமற்ற தமிழ் சினிமா” என்பதைச் சுற்றியே இருந்தது.

இந்த சம்பவம் முடிந்து சரியாக 2 ஆண்டுகள் கழித்து சட்டம் பயில்வதற்காக சென்னை வந்த அந்த மாணவனால் அதனை தொடர முடியாமல் போக, பத்திரிகையில் சினிமா நிருபராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்து முடிந்து அனைவரும் செல்லும் நேரத்தில் “தம்பி இங்கே வா, நீ காரைக்குடி அழகப்பா கல்லூரில பேசின அலெக்சாண்டர் தானே?” என எம்.ஜி.ஆர் கேட்க, அதற்கு ஆமா சார் என அவரும் பதிலளித்திருக்கிறார்.

பிறகு

எம்.ஜி.ஆர்: இங்க என்ன பண்ணிட்டிருக்க?

“சினிமா நிருபரா வேலை பார்க்கிறேன் சார்”

எம்.ஜி.ஆர்: நிருபரா?

என யோசித்தவர், “சரி நாளைக்கு காலை இங்கே வந்திடு” என்றிருக்கிறார்.

அதன்படியே மறுநாள் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றவரிடம் அவர் ஒரு புத்தகத்தை கொடுத்து “நீ அந்த வேலைக்கெல்லாம் போக வேண்டாம். என் வீட்டு மாடியில் தங்கி, இந்த நாவலைப் படித்து அதற்கு திரைக்கதை எழுது” எனக் கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் கூறியபடியே அந்த மாணவர் அலெக்சாண்டர் எம்.ஜி.ஆர் வீட்டு மாடியில் தங்கி அந்த நாவலைப் படித்து திரைக்கதை ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறார். அதுதான் அந்த மாணவன் பேனா பிடித்து எழுதிய முதல் திரைக்கதை.

ஆனால் பல காரணங்களால் அது திரைப்படமாக உருவாகாமல் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. அந்த கதைதான் “பொன்னியின் செல்வன்” எம்.ஜி.ஆரின் சொல்படி திரைக்கதையை எழுதிய அந்த அலெக்சாண்டர்தான் தமிழ் சினிமாவின் எதார்த்த இயக்குநராக பயணித்த ‘இயக்குநர் மகேந்திரன்’.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள Arrawinth Yuwaraj-ன் பதிவுதான் தற்போது சமூக வலைதள பயனர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.