சினிமா

’முண்டாசுப்பட்டி’ எனும் நகைச்சுவை அருமருந்து.. காலம் கடந்து பேசும் கிராமத்து கதை!

rajakannan

முண்டாசுப்பட்டி ஒரு நகைச்சுவை மருந்து:

சில படங்கள் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத உணர்வை தரக்கூடியவை. அப்படியான ஒரு திரைப்படம் தான் முண்டாசுப்பட்டி. நகைச்சுவை உணர்வு மன அழுத்தத்தை குறைக்கும் அருமருந்து என்று சொல்வார்கள். அப்படியான ஒரு அற்புதமான நகைச்சுவை படம் தான் இது. அதற்கு சின்ன எடுத்துக்காட்டு, விஷ்ணு விஷால் இறந்தவரை புகைப்படம் எடுக்க கேமிராவை வெளியே எடுப்பார். அதுவரை வீட்டிற்கு உள்ளே இருந்த அனைவரும் கண் இமைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வெளியே சென்றுவிடுவார்கள். கேமிராவை பார்த்தால் அவர்களுக்கு அவ்வளவு பயம். வெளியே நின்று கொண்டு ‘நாங்க வெவரமாக்கும்’ என்று அவர்கள் சொல்லும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. காட்சிக்கு காட்சி படத்தில் வரும் ஒவ்வொருவரும் இடைவெளி விடாமல் சிரிக்க வைப்பார்கள்.

முனிஷ்காந்தை வெளிக்காட்டிய முண்டாசுப்பட்டி

ராமதாஸ் என்றும் முனிஷ்காந்தின் நடிப்பு திறனை வெளிக் கொண்டு வந்து அவரை முறையாக அறிமுகப்படுத்திய படம் தான் இது. இதற்கு முன் பல படங்களில் அவர் தலையை காட்டி இருந்தாலும், இந்தப் படத்தில் அவர் வரும் காட்சி எல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதை கேரண்டி செய்திருப்பார். அப்படி ஒரு இயல்பான நடிப்பு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக போட்டோ எடுக்க விஷ்ணு விஷாலின் ஸ்டூடியோவிற்கு அவர் வரும் முதல் காட்சியில் இருந்தே சிரிப்பு மழை பொழிய வைப்பார். முனிஷ் காந்த் என்ற பெயருக்கு அவர் விளக்கம் கொடுப்பது தனி ரகம்தான்.

அதுவும் அந்த பாயம் காட்சியெல்லாம் சான்ஸ்சே இல்லை. சோறு போட்டே கொல்லிங்களேடா, என்னையாடா அசிங்கப்படுத்துறீங்க என்று அவர் சொல்லும் காட்சியெல்லாம் நகைச்சுவை மிரட்டல்.

போட்டோவில் தன்னுடைய உருவம் இருப்பதை பார்த்தும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்ஸ் அப்ளாஸ்தான். விஷ்ணு விஷால், காளி வெங்கட் அளவிற்கு படத்தில் இவரும் ஸ்கோர் செய்திருப்பார். முண்டாசுப்பட்டியை தொடர்ந்து மரகத நாணயம், மாநகரம் படத்தில் தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார்.

நகைச்சுவையில் மிரட்டிய ஆனந்த் ராஜ்

படத்தின் பிற்பகுதியில் சில நிமிடங்களே வந்தாலும் தன்னுடைய இயல்பாக நடிப்பால் நகைச்சுவையில் நம்மையெல்லாம் கட்டிப்போட்டிருப்பார் ஆனந்த்ராஜ். எப்படி இருந்த வில்லனா இப்படி நகைச்சுவை நடிப்பில் மிரட்டுகிறார் என நம்மையே வியக்கவைத்திருப்பார். அந்த பூனை சூப் காமெடி எவர் க்ரீன் தான். ஜமீன் என்றால் கெத்தாக என்று நினைத்தால் பாடி லாங்குவேஜில் பின்னி எடுத்து இருப்பார். வில்லத்தனத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருப்பார்.

ரஜினி அல்ல கமலின் ரசிகராக..

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டம் வரை எம்.ஜி.ஆரின் ரசிகராக பல ஹீரோக்கள் வெளிப்படுத்தி வந்தனர். சத்யராஜ், பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் இதற்கு எடுத்துக்காட்டு. எம்.ஜி.ஆருக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் ரஜினிகாந்தின் ரசிகராக தான் பல ஹீரோக்கள் வலம் வருகிறார்கள். ஆனால், முண்டாசுப்பட்டி படத்தில் ஹீரோ கமல்ஹாசன் தீவிர ரசிகராக காட்டப்பட்டிருப்பார்.

நகைச்சுவை எனும் தேனில் கலந்து முற்போக்கு

படத்தில் முக்கியமான காட்சி ஒன்று இருக்கும் அதுதான் இயக்குநரின் தெளிவான சிந்தனையை வெளிக்காட்டும். அந்த கல்லை(மக்களுக்கு சிலை) விஷ்ணு விஷால் ஆனந்த் ராஜிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டு வரும் போதும் அந்த ஊர் வெட்டியான் (மாயனத்தில் இருப்பவர்) தொழில் செய்பவர் அவர்களுக்கு உதவுவார். இந்த கல்லை நீங்கள் ஊருக்குள் கொண்டு செல்லுங்கள் என்று விஷ்ணு விஷால் சொல்வார். அதற்கு அந்த அவர் சொல்வர் ‘நான் எடுத்துச் சென்றால் தீட்டாகிவிட்டது என்று ஊர்மக்கள் சொல்வார்கள்’ என்று. இந்த ஒரு காட்சி போது ஊர்களில் உள்ள தீண்டாமையின் வடிவத்தை. மற்றபடி கிராம மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளை கூடுமான வரை நகைச்சுவையாலேயே சாட்டையடி கொடுத்திருப்பார். போலி சாமியார்களின் வாழ்க்கையையும் போகிற போக்கில் வெளிப்படுத்தியிருப்பார்.

மயக்கவைக்கும் பாடல்கள்

முண்டாசுப்பட்டியில் இடம்பெற்ற சேன் ரோல்டனின் பாடல்கள் அனைத்தும் இனிமையான பாடல். காதல் கனவே தள்ளிப் போகாதே பாடல் கேட்க அவ்வளவு இனிமையான காதல் படல். பிரதீப் குமாரின் காந்த குரலும் அதற்கு ஒரு காரணம். ராசா மகராசா பாடல் கொஞ்சம் வித்தியாசமான ரகம். கேட்க கேட்க வேறு உணர்வை நமக்கு கொடுக்கும். பள்ளிக் கூட சீனில் வரும் இது என்ன பாடலும் ரசிக்கும்படியான பாடல்தான்.

இயக்குநர் ராம் குமாருக்கு இதுதான் முதல் படம். ராட்சசன் படம் மூலம் நம்மையெல்லாம் மிரட்டியவர் இவர். இவரது அடையாளமாக இன்றளவும் ராட்சசன் படம் தான் உள்ளது. ராட்சசன் படம் எந்த அளவிற்கு முக்கியமான அந்த அளவில் அவரது சினிமா கேரியரில் முண்டாசுப்பட்டியும் தான். 2014ம் ஆண்டு இதேநாளில் தான் முண்டாசுப்பட்டி படம் வெளியானது. எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நகைச்சுவை விருந்தை இந்தப்படம் தவறாமல் கொடுக்கும்.