துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் DQ41 படத்தின் தலைப்பு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கி வருகிறார். இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
இந்த காதல் கதையில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் ஒரு சுவரின் மேல் அமர்ந்து மாணவர்கள் போல சீருடை அணிந்து மகிழ்ச்சியாக உரையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவிநாஷ் கொல்லா கலை இயக்கத்தை கவனிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.