மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான த்ரிஷ்யம் தொடரின் முதல் இரண்டு பாகங்களும், சமீபத்திய மூன்றாம் பாகமும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் விருது விழாவில் த்ரிஷ்யம் 4 உருவாகும் என மேடையிலேயே அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான படம் ‘த்ரிஷ்யம்’. 2013-ல் வெளியான முதல் பாகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சைனீஸ் உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் 2021ல் ஓடிடியில் வெளியிடப்பட்டது. அந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்று, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இரு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் கடந்த மே மாதம் வெளியாகி, இந்த முறையும் மிகப்பெரிய ஹிட் ஆக மாறியது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் த்ரிஷ்யம் பட தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது. அந்த மேடையில் "இதே மேடையில் வைத்து தான் த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் வரும் என இயக்குநரின் அனுமதி இல்லாமலே சொன்னேன். இப்போது மீண்டும் த்ரிஷ்யம் நான்காம் பாகம் வரும் என அவரை மேடையில் வைத்துக் கொண்டே நான் சொல்கிறேன். அந்தப் படம் உருவாக்க வேண்டும், உருவாகும்!" என தெரிவித்தார் தயாரிப்பாளரான ஆண்டனி.
த்ரிஷ்யம் பட வரிசைகளுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் அதேவேளையில், அப்படம் பல கேலிகளுக்கும் உள்ளானது. குறிப்பாக த்ரிஷ்யம் 3ம் பாகம் அறிவிப்பு வந்த போதே சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. வருணை கொலை செய்ததற்கு தண்டனை பெற்றிருந்தால் கூட இந்நேரம் விடுதலையாகி வெளியவே வந்திருக்கலாம். ஆனால் அதை மறைக்கிறேன் என்ற பெயரில் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மீம்ஸ் வந்தன. இந்த சூழலில் த்ரிஷ்யம் 4 பற்றி வந்திருக்கும் அறிவிப்பு பேசு பொருளாகி இருக்கிறது. அதே சமயம் இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் உறுதி செய்தாலும், நடிகர் மோகன்லால் சில பேட்டிகளில் த்ரிஷ்யம் 4 பற்றி பேசி இருந்தாலும், இயக்குநர் ஜீத்து ஜோசப் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எனவே உடனடியாக த்ரிஷ்யம் 4 கதையை ஜீத்து உருவாக்குவாரா? இந்தக் கதையை அவர் எப்படி தொடர்வார்? என்பது மாதிரியான கேள்விகளும் எழுந்துள்ளன.